Ruturaj Gaikwad : 'ஈஸியா ஜெயிப்போம்னு நினேச்சேன். ஆனா…' – ருத்துராஜ் விளக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டி இது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை அணியும் வென்றிருக்கிறது. சென்னை அணியின் சார்பில் சிமர்ஜித் சிங் நன்றாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். பேட்டிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட் நன்றாக ஆடி கடைசி வரை நின்று போட்டியை வென்று கொடுத்திருக்கிறார். போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் போட்டி குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் பேசியவை இங்கே.

ருத்துராஜ் பேசியவை, ‘இது ஒரு அபாரமான தருணம். கடைசி லீக் போட்டியில் பயங்கரமான வெப்பமான சூழலில் சிறப்பாக ஆடி வென்றிருக்கிறோம். பவர்ப்ளேயில் 55 ரன்களை எடுத்திருந்த போது விரைவாக வென்றுவிடுவோம் என நினைத்தேன். ஆனால், ஒன்றிரண்டு விக்கெட்டுகள் வேகமாக விழுந்தது ராஜஸ்தானுக்கு கொஞ்சம் வாய்ப்பை கொடுத்துவிட்டது. எங்கள் அணியில் நன்றாக ஸ்ட்ரைக் செய்து ஆடக்கூடிய வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதனால் ஒரு முனையில் கடைசி வரை நின்று ஆட வேண்டியதை என்னுடைய பணியாக எடுத்துக்கொண்டேன்.

இப்படியான பிட்ச்களில் ஆடுவதையும் அதிகமாக விரும்புகிறோம். ஏனெனில், இந்த மாதிரியான பிட்ச்களில் எங்களின் ஸ்பின்னர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. பவுண்டரிகளும் பெரிதாக இருப்பதால் சிக்சர்கள் அடிப்பதும் கடினம். விக்கெட் ப்ளாட்டாக இருந்தால் யார்க்கர்களை அதிகம் நம்புவோம். இதேமாதிரியான பிட்ச்களில் வேகத்தை உருவிவிட்டு வீசப்படும் ஸ்லோயர் ஒன்களை அதிகம் நம்புவோம்.’ என்றார்.

சேப்பாக்கத்தில் சென்னை அணி பெற்றிருக்கும் 50 வது வெற்றி இது. 71 போட்டிகளில் ஆடி 50 வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியை சின்னச்சாமி மைதானத்தில் மே 18 ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியிலும் சென்னை அணி கட்டாயம் வென்றாக வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.