மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வகையில், நேற்று ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இன்று காலை நிலவரப்படி 15 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி பெல்கோரட் பிராந்திய கவர்னர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறுகையில், “குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் முக்கிய பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் இறந்தனர். 11-ம் தேதி தாக்குதலின்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார். இதன்மூலம் உக்ரைனின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 19 பேரை இழந்திருக்கிறோம்’ என்றார்.
இதற்கிடையே, உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் உக்ரைன் படைகள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதாக ராணுவ தளபதி தெரிவித்தார். அங்கு, ரஷியப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையே ரஷியாவின் இடைவிடாத தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறினார்.
கார்கிவ் பகுதியில் பல கிராமங்களை பிடித்திருப்பதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், எதிர் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கூறி உள்ளது.