டேராடூன்: சார் தாம் யாத்திரையின்போது மேலும் 2 பக்தர்கள் உத்தராகண்டில் உயிரிழந்தனர். இதையடுத்து யாத்திரையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புண்ணியத் தலங்கள் உள்ளன. இவற்றை இணைக்கும் யாத்திரை, `சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் சார் தாம் யாத்திரை கடந்த 10-ம் தேதி தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்இந்த யாத்திரையில் பங்கேற்று புனிதத் தலங்களை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த யாத்திரையின்போது மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் 2 பக்தர்கள் உயிரிழந்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த லஷ்மி தேவி (75) என்பவர் மூச்சுத் திணறலால் பத்ரிநாத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதேபோல் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சம்பத்தி பாய் (62) யமுனோத்ரியில் இதயநோய் பிரச்சினை காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து சார் தாம் யாத்திரையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.