சென்னை – திருவண்ணாமலை வரை ரயில் சேவை நீட்டிப்பு; பயணிகள், வர்த்தகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

சென்னை: சென்னை கடற்கரை – திருவண்ணாமலை வரை நீட்டிப்பு ரயில் சேவைக்கு பயணிகள், வர்த்தகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகிடைத்துள்ளது. இந்த ரயிலில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், புதிய ரயில்களை விடவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கடற்கரை – வேலுார் கண்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, இந்த ரயில் நீட்டிப்பு சேவை கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அதன்படி, இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.

திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, காலை 9:50 மணிக்கு சென்னை கடற்கரையை அடைகிறது. சென்னை கடற்கரை – திருவண்ணாமலைக்கு கட்டணம் ரூ.50 ஆகும்.

சாதாரண, நடுத்தரமக்களின் பயணத்தில் பேருதவியாக இருக்கும் இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருவண்ணாமலைக்கு கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் என அனைத்து பயணிகளுக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், எல்லாபெட்டிகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் இந்த ரயிலில் சிலவசதிகள் குறைவாக இருப்பதால் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை–திருவண்ணாமலை வரை நீட்டிப்பு சேவை திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ரயிலில் தினசரி கூட்டம் நிரம்பி வழிகிறது. அதேநேரத்தில், இந்த ரயிலில் கழிவறை வசதி இல்லாத நிலை இருக்கிறது.

ஒரு நாளைக்கு ரயிலில் பெட்டிகளில் கழிவறை வசதி இருக்கிறது. மறுநாள் இயக்கப்படும் ரயிலில் கழிவறை வசதி இல்லாத நிலை இருக்கிறது. நாள்தோறும் இயக்கப்படும் ரயிலில் கழிவறை வசதி இருக்க வேண்டும். மேலும், தென் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.