நாகப்பட்டினம் எம்.பி செல்வராசு காலமானார்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை (மே 13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையானில் கந்த 1957-ல் பிறந்தவர். இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட அவர், அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினர், துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் என பிரித்து அமைக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர்.

1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இந்நிலையில், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், இன்று அதிகாலை காலமானார்.

அவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.