இதற்கு முன்பு நடந்த தேர்தலின்போது அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற உறுதிமொழியை பாஜக அளித்து வந்தது. தற்போது அங்கு கோயில் கட்டப்பட்ட நிலையில் அதன் பலனை பாஜக மக்களவை தேர்தலில் பெற முயலும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த முறை 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 3 கட்டங்கள் முடிந்தும் கோயில் விவகாரம் இன்னும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இனிவரும் 4 கட்ட தேர்தலில் ராமர் கோயில் மீதான விவாதம் பிரச்சாரங்களில் முக்கிய இடம்பெறத் தொடங்கி விட்டது. அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சார ஊர்வலம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.
சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான வகையில் இந்த ஊர்வலம் இருந்தது. இதை மிஞ்சும் வகையில் இண்டியா கூட்டணியின் கட்சியினரும் ஒரு பிரச்சார ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஊர்வலத்தை, வரும் 18-ம் தேதிக்கு முன்பாக நடத்த சமாஜ்வாதி கட்சி தயாராகிறது. இதில் இடம்பெறும் எதிர்க்கட்சிகள் தங்கள் மீது பாஜக முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக உ.பி. மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் தனது வெற்றிக்காக சமாஜ்வாதி கட்சி இந்த ஊர்வலத்தை நடத்துகிறது. இதில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா வத்ரா, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ், அவரது மனைவியான டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’யிடம் அயோத்தியின் சமாஜ்வாதி மாவட்ட தலைவரான பாரஸ்நாத் யாதவ் கூறும்போது, “பாஜக இங்கு செய்யும் பிரச்சாரங்களில் அவர்கள் அல்லாத ஆட்சி அமைந்தால், ராமர் கோயில் மருத்துவமனையாக மாற்றப்பட்டு விடும் என தவறானத் தகவல்கள் வெளியாகின்றன.
தற்போது வரை முடிந்த தேர்தல்களில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முன்வராததை பாஜக உணர்ந்ததாகக் காட்டுகிறது. பாஜகவின் புகாருக்கு பதிலளிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக சமாஜ்வாதி சார்பில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன் பலன் அருகிலுள்ள அமேதி, ரேபரேலியிலும் கிடைக்கும்’ என்றார்.
இதனிடையே, உ.பி.யின் சம்பல் தொகுதியில் துறவியும் பாஜக தலைவருமான பிரமோத் கிருஷ்ணாம் தமது பிரச்சாரங்களில், ’ராமர் கோயில் மீதான தீர்ப்பு வெளியான பின் ராகுல் காந்தி, தமது கட்சியின் ஆட்சி அமைந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றி அமைக்கலாம் என்று தெரிவித்து வருகிறார்’ என்றார். பிரமோத் கிருஷ்ணாம், சில மாதங்களுக்கு முன்பு வரை காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் கட்டமாக, அயோத்தியில் மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.