வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிக்கப்படும்: ராமதாஸ்

விழுப்புரம்: “தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை. எனவே, இடஒதுக்கீடுதொடர்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று (மே 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவ, “சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் சமூக நீதி குறித்து தொடர்ந்து விடாமல் பேசிவருவது பாமக தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும். நான்காவது கட்டமாக தேர்தல் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநானயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை பாமக வலியுறுத்தி வருகிற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென தமிழக அரசு கூறி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பிஹார் ஆந்திரா, கர்நாடகாவில் நடத்தப்பட்டு தெலங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை . அன்புமணி ராமதாஸ் , ஜிகே மணி ஆகியோர் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால், இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.

மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது. அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அமைதி காத்து வருகிறார். கர்நாடகா தண்ணீர் தராத நிலையில் குறுவை சாகுபடி செய்ய தண்ணீர் பற்றாக்குறைஏற்படும் என்பதால் மாற்று சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். 8 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் நனைந்தது குறித்து அதிகாரிகள் மீது விசாரணை செய்ய வேண்டும். அனைத்து நெல் ஒழுங்கு விற்பனைகூடத்தில் 10 ஆயிரம் மூட்டைகள் வைக்கும் அளவுக்கு குடோன் அமைக்க வேண்டும்.

திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்து உள்ளது. பல வருடங்களாக உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தை பெருக்கலாம். ஆனால் இதனை அதிமுகவும், திமுகவும் செய்யவில்லை. மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும். அரிமாசங்கம், வனத்துறை இணைந்து மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாளாரமாக கிடைப்பதால்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு நினைத்தால் ஒருவாரத்தில் கட்டுபடுத்தலாம். காவல் துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதால்ஆந்திராவுக்கே சென்று கஞ்சா தோட்டங்களை போலீஸார் அழிக்கலாம், ஆனால், அதனைசெய்யவில்லை

தமிழகத்தில் வெப்பத்தினால் இதுவரைக்கும் மூன்று நான்கு பேர் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் . நெல்லைமாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பில் காவல் துறை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

இஸ்ஸாமியர்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசி வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள்” என்றார். இந்த சந்திப்பின்போது, பாமக மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.