பாட்னா: பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடிவரும் பெண் ஒருவர், இன்று (மே 13) பிஹாரில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டு தனது வாக்கினை செலுத்தியது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிஹாரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிஹாரில் சௌக்மா என்ற கிராமத்தில் சுபத்ரா தேவி என்ற பெண் வாழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உணவு கூட உட்கொள்ள முடியாமல் அவதியுற்றுவரும் அவர், கடந்த நான்கு நாட்களாக ஒரு சில சொட்டு தண்ணீர் மட்டுமே குடித்திருக்கிறார்.
இந்தச் சூழலிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற ஆசையை தனது மகன் மகன் விஜய் குமார் மிஸ்ராவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பிஹாரின் தர்பங்காவில் உள்ள உள்ளூர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு சுபத்ரா தேவியை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து மிஸ்ரா கூறும்போது, “எனது அம்மா நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். இருப்பினும் கடைசி தருணத்தில் கூட தனது ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் என ஆசைப்பட்டு வாக்களித்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக ஒரு சில சொட்டு தண்ணீர் மட்டுமே குடித்திருக்கிறார். தான் வாக்களிக்க வேண்டும் என்ற ஆசையை என்னிடம் வெளிப்படுத்தினார்” என கண்ணீருடன் தெரிவித்தார்.