ஜனாதிபதித் தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கியவர்களில் சில அரச ஊழியர்களும் உள்ளதால், அவர்கள் பணியில் ஈடுபடுதல் மற்றும் ஏனைய விடயங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேசப்படுவதால்;, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு, சட்டமா அதிபர் மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்தாலோசித்து நேற்று அமைச்சரவையில் ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் அமைச்சர் அறிவித்தார்
அடுத்த தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய விதத்தில் மாகாண சபைத் தேர்தலை முரண்பாடுகளின்றி நடத்துவதற்கு சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.