ஒன் பை டூ: “தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக் கூடாது…” என்ற அன்புமணி ராமதாஸின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“அர்த்தமே இல்லாத கருத்து. ‘ஒன்றிய அரசுடன் இணங்கிப்போனால்தான் திட்டங்கள் கிடைக்கும். எனவே, பா.ஜ.க கூட்டணியிலுள்ள சந்திரபாபு நாயுடுக்கு வாக்களியுங்கள்’ என்ற அர்த்தத்தில், ஆந்திர தேர்தல் களத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். ஓர் அரசியல் கட்சியைத் தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்பவர் அன்புமணி ராமதாஸ். ‘மீண்டும் மோடி பிரதமர் ஆவார். ஒன்றிய அரசில் நமக்கு ஏதாவது பதவி கிடைக்கும்’ என்று மனக்கணக்கு போட்டு இப்படியெல்லாம் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார் அவர். எனவே, அன்புமணி சொல்லும் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒன்றிய பா.ஜ.க அரசைப் பொறுத்தவரையில், ‘மாநில அரசு என்பது பாதம் தாங்கி பழனிசாமியைப் போன்று அடிமையாக இருக்க வேண்டும்’ என்று நினைக்கிறது. ஆனால், தி.மு.க போன்ற சுயமரியாதைக் கட்சியிடம் இவர்களது திட்டம் எடுபடாது. ஒன்றிய பா.ஜ.க அரசு பின்வாசல் வழியாகக் கொண்டுவர நினைக்கும் மக்கள் விரோதச் சட்டங்களை, தி.மு.க அரசு அனுமதிப்பதில்லை.

இப்படி பா.ஜ.க அரசுக்குப் பெரிய தலைவலியாக தி.மு.க அரசு இருப்பதால், நியாயமாக ஒரு மாநில அரசுக்குக் கொடுக்கவேண்டிய வரிப் பகிர்வு, வரி பாக்கி, பேரிடர் நிவாரணம் என எதையும் கொடுக்காமல் கடமையை மீறிவருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.”

பழ.செல்வகுமார், திலகபாமா

திலகபாமா, பொருளாளர், பாட்டாளி மக்கள் கட்சி

“நூற்றுக்கு நூறு உண்மை. ஓர் அரசியல் கட்சி, ஆட்சி அமைத்த பிறகு மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க அரசோ, மத்திய பா.ஜ.க அரசுடன் அகங்காரத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான். இதைத்தான் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதற்காக அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசுடன் ஒத்துப்போக வேண்டும் என்று அர்த்தமில்லை. இணைந்து போகவேண்டிய இடத்தில், அரசியல் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் சொல்கிறோம். நவோதயா பள்ளிகள் போன்ற திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் பாதிக்கப்படுவது ஏழை மாணவர்கள்தான். மாநிலத்துக்கு நன்மையென்றால், அதைச் செய்ய மாநில அரசு முன்வர வேண்டும். ‘வெற்றிபெறும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால்தான் மக்களுக்கான திட்டங்களை எளிமையாகக் கொண்டுவர முடியும்’ என்பதற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டோம். இப்படி மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தமிழக அரசும், மத்திய அரசுடன் ஒத்துப்போவதில் எந்தத் தவறும் இல்லை!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.