அதானி, அம்பானி ஆகிய தொழிலதிபர்களுக்காகவே பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கூறிவந்தபோது மோடி அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்து பதிலளித்ததாக இல்லை. இப்படியிருக்க, கடந்த வாரம் தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, `தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அம்பானி, அதானியைப் பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். உங்களுக்குள் என்ன டீல்… அவர்களிடமிருந்து காங்கிரஸ் முகாமுக்கு எவ்வளவு கறுப்புப் பணம் வந்திருக்கிறது… மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரஸுக்குக் கிடைத்துவிட்டதா?’ என்று மோடி கேள்வியெழுப்பினார்.
இதற்கு எதிர்வினையாற்றிய ராகுல் காந்தி, “பா.ஜ.க-வின் ஊழல் டெம்போவின் ‘ஓட்டுநர்’ மற்றும் ‘உதவியாளர்’ யார் என்பது நாட்டுக்கே தெரியும். அச்சப்படாமல் சி.பி.ஐ, அமலாக்கத்துறையை அவர்களிடம் அனுப்பி விசாரணை மேற்கொள்ளுங்கள்” என்று சவால் விட்டார்.
இந்த நிலையில், நாட்டின் விமான நிலையங்களை மோடி தனது டெம்போ நண்பர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு கொடுத்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார். இது குறித்து ராகுல் காந்தி நேற்றிரவு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருந்தேன். இங்கிருந்து மும்பை மற்றும் கவுகாத்தியிலிருந்து அகமதாபாத் வரை அனைத்து விமான நிலையங்களையும் மோடி தனது ‘டெம்போ நண்பரிடம்’ ஒப்படைத்திருக்கிறார். நாட்டின் சொத்துகள் எத்தனை டெம்போக்களுக்கு விற்கப்பட்டது என்பதை மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?” என கேள்வியெழுப்பி வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும் அந்த வீடியோவில், “வரி செலுத்துவோரின் பணத்தில் கட்டப்பட்ட மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, கவுகாத்தி, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஏழு விமான நிலையங்கள் 50 ஆண்டுகளுக்கு அதானியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக எத்தனை டெம்போக்கள் வந்தது என்று கூறுங்கள் மோடி… எப்போது விசாரணையைத் தொடங்குவீர்கள்… அதானியும், அம்பானியும் கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று ஐந்தாறு நாள்களுக்கு முன்பே சொல்லியிருந்தீர்கள். சி.பி.ஐ, அமலாக்கத்துறையை அங்கு அனுப்புங்கள்” என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.