திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவுக்குஉட்பட்ட தச்சாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாண்டியன் – வயது 36. இவர், சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்காக செயல்பட்டுவரும் விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் பலரையும் தன்பாலின உறவுக்குக் கட்டாயப்படுத்தி, பாலியல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார் துரைபாண்டியன். ஒவ்வொருவரையாக தனி அறைக்கு அழைத்துச்சென்று அத்துமீறி நடந்துகொண்டிருக்கிறார்.
துரைபாண்டியனின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதையடுத்து, அச்சமடைந்த மாணவர்கள் `1098’ என்ற சைல்டு லைன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகாரளித்தனர். இதையடுத்து, சேத்துப்பட்டு போலீஸார் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி `போக்சோ’ சட்டத்தில் வார்டன் துரைபாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. `குற்றவாளி’ என நிரூபணமான விடுதி வார்டன் துரைபாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதத் தொகையும் விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி பார்த்தசாரதி. இதையடுத்து, வேலூர் மத்திய சிறைச்சாலையில் துரைபாண்டியன் அடைக்கப்பட்டார்.