புதுடெல்லி: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தடை குறித்த அறிவிப்பில், “விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை. பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன.
போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பினை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன. இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறி தடைக்கான காரணங்களாக மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது.