சென்னை: மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளமின்மாற்றிகளை மாற்ற மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால், தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், மின்மாற்றிகள், மின்கம்பிகளில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், வெப்பம் காரணமாக அதில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுகின்றன.
அண்மையில், ஆவடி அடுத்தபட்டாபிராமில் உள்ள துணைமின் நிலையத்தில் மிகப் பெரியதீ விபத்து ஏற்பட்டது. இதற்குகாரணம், அங்குள்ள மின்மாற்றிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அதில் பழுது ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,949 துணைமின் நிலையங்களில் 4 ஆயிரம் மின்மாற்றிகள் உள்ளன. இதில், 800 மின்மாற்றிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது, அனுமதிக்கப்பட்ட ஆண்டைவிட அதிகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இவற்றை மாற்ற மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு மின்மாற்றியை மாற்ற ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை செலவாகும். துணைமின் நிலையங்களில் உள்ள மின்மாற்றிகளை மாற்ற ரூ.30 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகும். தற்போது, 200 துணைமின் நிலையங்களுக்குத் தேவையான மின்மாற்றிகள் கையிருப்பில் உள்ளன. தேவைப்படும்போது பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும் என்றனர்.