சென்னை: இந்தியாவில் இது மக்களவைத் தேர்தலுக்கான காலம். அதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ‘புதுப் புது’ எண்களில் இருந்து தங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சொல்வதாக மொபைல் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஹைதராபாத் எனது பூர்விகம். பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். முதலில் எனக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அடுத்த முறை கர்நாடகா. சமயங்களில் ரெக்கார்ட் செய்யப்பட்ட அழைப்புகள் கூட வருகின்றன. அதில் நான் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சொல்கிறார்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் 25 வயதான நிதிஷ்.
அண்மையில் தெலங்கானாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்பாக சுமார் 45 நாட்களுக்கும் மேலாக இந்த வகையிலான அழைப்புகளை அந்த மாநில மக்கள் பரவலாக பெற்றதாக தகவல். அதுவும் தேர்தல் தொடர்பாக அழைப்புகள், மெசேஜ்கள் என வாக்காளர்களின் போன்கள் பிஸியாக இருந்துள்ளன. இது தங்களது பிரைவசிக்கு பாதகம் தருவதாக சொல்லி மொபைல் போன் பயனர்கள், தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். வாட்ஸ்அப்பிலும் இந்த வகையிலான மெசேஜ் வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வகையிலான வேண்டாத தொல்லை மெசேஜ்கள் கனடாவில் குடியேறிய வினில் பீமானந்தம் என்பவரின் போனுக்கும் சென்றுள்ளது. அவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், வேட்பாளார் யார் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் சில கொள்கைகள் குறித்து விவாதித்தார்கள். எனக்கு முதலில் அது என்னவென்று புரியவில்லை. அதன் பிறகு இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என சொன்னார்கள்” என்கிறார் நிதிஷ். இது அரசியல் கட்சிகள் தங்களுக்காக வேண்டி நேரடியாக செய்து கொள்ளும் மார்க்கெட்டிங் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்றனர்.
ட்ரூ காலரில் சில மொபைல் எண்களை ‘ஸ்கூல் ஆஃப் பாலிடிக்ஸ’, ‘தேர்தல் சர்வே செயலி’ என பல பேர் Save செய்துள்ளனர். அந்த அளவுக்கு வாக்காளர்களை அரசியல் கட்சியினர் மொபைல் போன் வழியே டார்கெட் செய்துள்ளனர்.
இந்த மொபைல் எண்கள் டார்க் வெப் அல்லது கடன் வழங்கும் சில நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்டு இருக்கலாம். அவர்களிடம் அது வாக்காளரின் எண் என்ற தகவலாக மட்டும் இருந்திருக்கலாம். ஆனால், அது துல்லிய விவரங்களோடு இருந்திருக்காது. அதனால் தான் ரேண்டமாக அழைத்துள்ளனர்.
டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூட ஐவிஆர் அடிப்படையில் இந்த விவரங்களை வழங்கி இருக்கலாம். இந்த மாதிரியான எண்கள் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (டிராய்) புகார் அளிக்கலாம் என அதில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தீர்வு சொல்லியுள்ளார்.