உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – என வட மாகாண ஆளுநர்

உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல, கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் (14/05/2024) நேற்று நடைபெற்ற போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

உள்ளூராட்சி அமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் தம்மிடம் காணப்படும் நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பை வடக்கு மாகாணம் முழுவதும் செயற்படும் வகையிலாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் தெரிவித்தார்.

திறந்தவெளி அரங்குகளில் உள்ளூர் கலைகளை மேடையேற்றி அவற்றினை அழிந்திடாமல் பாதுகாத்து புத்துயிர் வழங்க மாகாண கலாசார திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

உள்ளூர் எழுத்தாளர்களின் தற்போதைய நிலைமை, பதிப்பகங்கள், அச்சகங்களின் செயற்பாடுகள், நூல் பதிப்பு மற்றும் விற்பனை, கலை, இலக்கியத் துறையின் சமகாலப்போக்கு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.