பால்டிமோர்: இந்தியாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் தலைவர் பிரதமர் மோடி என அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் சஜித் தரார் புகழ்ந்துள்ளார். அதோடு பாகிஸ்தானுக்கும் மோடியை போன்ற ஒரு தலைவர் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
“மோடி பிறப்பிலேயே தலைவர். அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் இயல்பாகவே உள்ளன. மிகவும் மோசமான சூழலில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த பிரதமர் அவர். பாகிஸ்தானில் அமைதி நிலவுவது இந்தியாவுக்கும் நலன் தரும். இந்தியாவின் அடுத்த பிரதமர் அவர்தான். இளம் மக்கள் தொகை மூலம் இந்தியா வளம் பெறுகிறது.
பாகிஸ்தான் நாட்டில் அடிப்படை பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காண அரசு முன்வரவில்லை. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. எரிபொருள் விலை அதிகமாக உள்ளது. நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளது. பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. எங்களால் ஏற்றுமதி பணியை மேற்கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற காரணமே மின்சார கட்டணம் உயர்வுதான்.
நாட்டில் அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவுகிறது. பயங்கரவாதம் மற்றும் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர வேண்டி உள்ளது. இப்படி நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு தலைவர் எங்களுக்கு தேவை” என சஜித் தரார் தெரிவித்துள்ளார்.
கடந்த 1990-களில் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார் சஜித் தரார். தொழிலதிபரான அவர் தனது நாட்டின் அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.