பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உப்பள்ளி பெண்டிகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட வீராப்புரா ஓனி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (வயது 20). இவர் தனது பாட்டி கங்கம்மா மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார்.
அதேப்பகுதியை சேர்ந்தவர் விஸ்வா என்கிற கிரீஷ் சாவந்த் (23). இவரும் அஞ்சலியும் வகுப்பு தோழர்கள் ஆவர். இதனால் அஞ்சலி, விஸ்வாவுடன் நட்பாக பேசி வந்தார். அத்துடன் விஸ்வா திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் விஸ்வா, அஞ்சலியை காதலித்து வந்ததாக தெரிகிறது. அஞ்சலி தன்னுடன் பழகி வந்ததால் அவரும் தன்னை காதலிப்பதாக விஸ்வா எண்ணினார். இதற்கிடையே வேலை விஷயமாக சென்றதால் அஞ்சலி வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அஞ்சலியின் வீட்டுக்கு சென்ற விஸ்வா, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அஞ்சலி மறுத்ததாக தெரிகிறது. மேலும் அவரை மைசூருவுக்கு வருமாறும் விஸ்வா அழைத்துள்ளார். அதற்கும் அஞ்சலி மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது தனது காதலை அஞ்சலியிடம் விஸ்வா தெரிவித்துள்ளார். இதனை நிராகரித்த அஞ்சலி, தான் உன்னை காதலிக்கவில்லை என்றும், நட்பாக தான் பழகியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஸ்வா, நான் கூறும்படி கேட்காவிட்டால் நேகாவை போன்று கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு அஞ்சலி, விஸ்வாவுடன் பேசவில்லை. இது அவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை விஸ்வா, அஞ்சலியின் வீட்டுக்கு வந்து அவரை கத்தியால் குத்தி உள்ளார். இதனால் பயந்து அஞ்சலி வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும் பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற விஸ்வா, அவரது கழுத்தை பிடித்து சுவரில் சாய்த்து வைத்து அஞ்சலியின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அஞ்சலி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் விஸ்வா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர காட்சிகளை பார்த்து அஞ்சலியின் பாட்டி கங்கம்மா மற்றும் இரண்டு சகோதரிகளும் கதறி அழுதனர்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொலையான அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், காதலை நிராகரித்ததால் அஞ்சலியை, விஸ்வா கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
முன்னதாக கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி கல்லூரி வளாகத்தில் வைத்து நேகா என்ற மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரை ஒருதலையாக காதலித்த பயாஸ் என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேகா கொலை சம்பவம் மறைவதற்குள் உப்பள்ளியில் அதேபோன்று காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.