‘நியூஸ் கிளிக்’ நிறுவனர் கைது செல்லாது: உச்ச நீதிமன்றம்: நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என்றும், அவரை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “இந்த வழக்கில் கைதுக்கான ஆதாரங்களின் நகல் வழங்கப்படவில்லை. எனவே, அவரது கைது செல்லாது. பிரபிர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது. எனவே, அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அதேநேரத்தில், அவர் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரை விடுவிக்கும்போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு ஜாமீன் பத்திரங்களை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக, சீனாவிடம் இருந்து நிதி உதவி பெற்று, டிஜிட்டல் மீடியா மூலம் தேச விரோதப் பிரச்சாரத்தை பிரபிர் புர்காயஸ்தா ஊக்குவித்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். புர்காயஸ்தா, ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்: மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிஏஏ அமலுக்கு பிறகு முதல் குடியுரிமைச் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா, 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கி, அவர்களை வாழ்த்தினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘என்னை பெண் காவலர்கள் தாக்கினர்’ – சவுக்கு சங்கர் முறையீடு: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கரை திருச்சி போலீஸார் புதன்கிழமை காலை கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரை திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கரை திருச்சியைச் சேர்ந்த மகளிர் போலீஸாரே அழைத்து வந்தனர்.
திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா முன்பு நடந்த விசாரணையின்போது சவுக்கு சங்கர், இன்று காலை கோவை மத்திய சிறையில் அழைத்து வந்த பெண் போலீஸார், காலை உணவுக்கு பொங்கல் வாங்கி தந்துவிட்டு, கண்ணாடியை கழட்டிவைக்கச் சொல்லிவிட்டு, பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு திருச்சி மகாத்மாக காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், இந்த விசாரணையின் போது, சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி மாவட்ட காவல் துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“பிரதமரின் பிரச்சாரங்களில் இந்து – முஸ்லிம் அரசியலே உள்ளது”: ‘மோடியின் உத்தரவாதம்’ வீழ்ச்சியடைந்ததாலும் ‘400 ப்ளஸ் வெற்றி’ முழக்கம் மவுனமாக புதைந்து போனதாலும் அதிகாரத்தில் இருந்து வெளியேற இருக்கும் பிரதமர் மோடி பேசுவதற்கு இந்து – முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
ராஜஸ்தான் சுரங்க விபத்தில் ஒருவர் பலி – 14 பேர் மீட்பு: ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ளது இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனம். இதன் சுரங்கத்தை ஆய்வு செய்ய கொல்கத்தாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை வந்திருந்தது. அந்தக் குழுவானது ஆய்வை முடித்துக் கொண்டு இரவு 8 மணியளவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வர முற்பட்டது. அப்போது லிஃப்ட்டின் ஒரு சங்கிலி எதிர்பாராத விதமாக அறுந்தது விபத்துக்குள்ளானது. இதில் லிஃப்டில் இருந்த 15 பேரும் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சிக்கிய 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.
‘இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது: நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வலுவான நிலையில் உள்ள இண்டியா கூட்டணி, ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஆட்சியை அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி’: ரஷ்ய போருக்குப் பின்னர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பதுங்குகுழி பள்ளிக்கு வந்த குழந்தைகள் தங்கள் ஆசிரியர், நண்பர்களை சந்தித்து உற்சாகம் அடைந்தனர். இந்தப் பதுங்கு குழி பள்ளிகள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பூமிக்கு அடியில் 6 மீட்டர் ஆழத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
‘ஆன்லைன் ரம்மி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துக’: ‘காஞ்சிபுரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிதிநிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதாவது 6 மாதங்களில் 8 உயி்ர்கள் பலியாகியிருக்கின்றன. இனியும் தமிழக அரசு உறங்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘ஃபீனிக்ஸ்’ ஆக மீண்ட ஆர்சிபி அணி!: கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிளே ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் இருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த அணி ஃபீனிக்ஸ் போல மீண்டு ‘ப்ளே ஆஃப்’ வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் எட்டு போட்டிகளில், ஏழு தோல்வியை தழுவி இருந்தது ஆர்சிபி. கிட்டத்தட்ட முதல் சுற்றோடு ஆர்சிபி நடையை கட்டும் என்ற நிலை. அதன் காரணமாக அணியின் ஆடும் லெவன் தேர்வு, ஏலம் சார்ந்த செயல்பாடு, அணியின் பலம், பேட்டிங், பவுலிங் குறித்தெல்லாம் விமர்சன கணைகள் ஏவப்பட்டது. அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஆனால், தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அது அனைத்தையும் தகர்த்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கே உடன் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறுவது அவசியம். முக்கியமாக சிஎஸ்கே-வை விட ரன் ரேட்டில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. அப்போதுதான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை சென்ற அரசுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்: சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்து ஒன்றில், துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பணம் பெற விதிகளை எளிதாக்கிய இபிஎஃப்ஓ: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) பயனர்கள் முன்பணம் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்கியிருக்கிறது. அதன்படி, இனி விண்ணப்பித்த 3 நாட்களில் முன்பணம் பெற முடியும்.
பகிரங்க மன்னிப்பு கோரிய ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் சேனல்: “தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்று ரெட் பிக்ஸ் ஊடகத்தின் பொது மேலாளரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியுமான ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.
இதனிடையே அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“பட்ஜெட்டில் 15%-ஐ சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது”: “காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது அரசு பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க விரும்பியது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், மதத்தின் அடிப்படையில் பட்ஜெட், வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.