திருநெல்வேலி: திருநெல்வேலியில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த கோடை மழையால் சாலைகள் வெள்ளக்காடானது. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்புள்ள சந்திப்பில் மழைநீருடன் பாதாள சாக்கடையும் கலந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது பகல்நேர வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், அணைப்பகுதிகள் மற்றும் பிற இடங்களில் மிதமான மழை பெய்துவந்தது. இதனால் வெப்பம் தணிந்தது. புதன்கிழமை (மே 15) காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): மூலைக்கரைப்பட்டி- 32, பாளையங்கோட்டை- 20, நாங்குநேரி- 3, திருநெல்வேலி- 5.20, கொடுமுடியாறு அணை- 9, நம்பியாறு அணை- 21, காக்காச்சி- 1. மொத்தம்- 91.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அணைகளின் நீர்மட்டம்: 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 34.47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 86.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 48.74 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 245 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
மாவட்டத்திலுள்ள 6 அணைகளிலும் நீர் இருப்பு சதவிகிதம்: பாபநாசம்- 16.55, சேர்வலாறு- 14.27, மணிமுத்தாறு- 48.02, வடக்கு பச்சையாறு- 4.90, நம்பியாறு- 20.48, கொடுமுடியாறு- 5.57, ஆக உள்ளது.
குளம்போல் தேங்கிய மழைநீர்: இதனிடையே திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில் இடி, மின்னலுடன் பலத்த கோடை மழை கொட்டியது. அரைமணி நேரத்துக்கு மேலாக கொட்டிய பலத்த மழையால் திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடானது. முக்கியமாக தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருநெல்வேலி சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம், முருகன்குறிச்சியிலிருந்து வண்ணார்பேட்டை செல்லும் சாலையோரம், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை சுற்றிய சிக்னல் பகுதி, சரோஜினி பூங்கா பகுதி, பாளையங்கோட்டை மத்திய சிறை முன்புள்ள சந்திப்பு, பாளையங்கோடை வ.உ.சி. மைதானம் என்று பல்வேறு இடங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கியதால் இப்பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லநேரிட்டது.
நிரம்பி வழிந்த பாதாள சாக்கடை: இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். மழைநீர் குளம்போல் தேங்கி போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் தண்ணீரை உடனுக்குடன் வடியவைக்க மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை நிர்வாகங்கள் அக்கறை செலுத்தவில்லை. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்புள்ள சந்திப்பில் மழைநீருடன் பாதாள சாக்கடையும் கலந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசியது. இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் பெரும் அவதியுற்றனர். மழைக்காலங்களில் எல்லாம் இந்த பிரச்சினை இப்பகுதியில் நீடித்து வருகிறது. இப்பகுதியிலுள்ள பாதாள சாக்கடை தொட்டி நிரம்பி வழிந்து, கழிவுநீர் மழைநீருடன் கலந்து தேங்குகிறது.
ஆட்சியர் எச்சரிக்கை: இதனிடையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும், வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெய்யத் தொடங்கிய மழை, மாலையிலும், இரவிலும் விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. இன்று மாலை 4 மணியளவில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 6.80, சேரன்மகாதேவி- 4.20, மணிமுத்தாறு, நாங்குநேரி- தலா 2.40, பாளையங்கோட்டை- 28, திருநெல்வேலி- 15.60 மழை பதிவாகியிருந்தது.