விருதுநகர்: கோடை மழை காரணமாக வத்திராயிருப்பு பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 29 அடியை நெருங்கும் நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை(மே 16) முதல் பிளவக்கல் அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.
வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணை மூலம் 40 கண்மாய்களும், 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால், கோடை காலத்திலும் அணையின் நீர்மட்டம் 25 அடிக்கு குறையாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்து சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதால், பிளவக்கல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 29 அடியை நெருங்கி வருகிறது. அதேபோல் 42 அடி உயரம் கொண்ட கோவிலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியை தாண்டி உள்ளது. மாலை நிலவரப்படி வினாடிக்கு 50 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு மே 15 முதல் 19-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, பிளவக்கல் அணையில் இருந்து நாளை (மே 16) முதல் முதற்கட்டமாக ஒரு வாரத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் திறக்கப்பட உள்ளது.