இந்திய ரிசர்வ் வங்கி கடன் விஷயத்தில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ரொக்கமாகக் கடன் அளிக்கும் வரம்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்நிறுவனங்கள் ரூ.20,000-க்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகையை ரொக்கமாக வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வாங்கி அனைத்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும் மே 8-ம் தேதியன்று கடிதம் அனுப்பியுள்ளது. ரொக்கப் பரிமாற்றத்தில் வருமான வரி விதிகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்த கடிதத்தில், “வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 SS விதியின்படி, எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையைப் பணமாகப் பெற முடியாது. அதோடு எந்த ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனமும் ரூ. 20,000-க்கும் அதிகமான கடன் தொகையை ரொக்கமாக வழங்கக்கூடாது’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
குறைந்த வட்டியில் கோல்டு லோன், பிசினஸ் லோன், ஹோம் லோன் போன்றவற்றை வழங்கும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனம் ( IIFL Finance) ரொக்க கடன்களுக்கான சட்டபூர்வ விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.