அரச முகாமைத்துவ உதவியாளர் இச்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற நபர்களுக்கு,பதவி உயர்வுகளை வழங்குவதற்காக நியாயமான வேலைத் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்றத்தில் (13) இடம்பெற்ற அரசு நிர்வாக உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரச முகாமை உதவியாளர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளாக 40% வீதம் வரை காணப்படும் போதும், அதனை விட அதிகமான புள்ளிகள் பெறப்பட்டிருந்த போதும் இரண்டு வினாப்பத்திரங்களுக்குமான ஆக குறைந்த புள்ளி 100 எடுக்க வேண்டும் என்ற விதிமுறையினால் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டார்.
அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானத்தினால் பல வருடங்கள் சேவையாற்றும் தகைமையுடைய பட்டதாரிகளுக்குக் கூட முகாமைத்துவ உதவியாளர் பதவியில் பதவி உயர்வு பெற முடியாதுள்ளமை குறித்து இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.
அதன்படி சம்பந்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து அரச சேவையில் நீண்ட காலமாகப் பணியாற்றுபவர்களுக்கு முகாமைத்துவ உதவியாளர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் சாதாரண முறையொன்றை தயாரித்தல் தொடர்பாக கவனம் செலுத்துமாறு பிரதமர் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் பிரதமரும் அரச நிருவாக அமைச்சருமான தினேஷ் குணவர்தன, மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.