இரு கைகளையும் இழந்தால் என்ன? எல்லாவற்றையும் விட, எல்லாரையும் விட தன்னம்பிக்கை எனும் மிகப்பெரிய கை என்னிடம் இருக்கிறதே எனத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பவர் தான்சேன்.
ராகவா லாரன்ஸின் `காஞ்சனா 3′ திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். டிரம்ஸ் வாசித்து பலரையும் மிரளவும் வைத்திருக்கிறார். இவர் வழக்கறிஞரும் கூட! தான்சேன் தமிழ்நாட்டில் முதன் முதலாக கார் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கிறார். அவரிடம் இது குறித்துப் பேசினோம்.
“நிறைய பேர் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்குறாங்க. இவங்களால என்ன பண்ண முடியும்னு நினைக்கிறாங்க. அந்த எண்ணத்தை உடைக்கணும்னு தொடர்ந்து ஏதாவது ட்ரை பண்ணிட்டே தான் இருப்பேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு டிரைவிங் பண்றதுக்குப் பிடிக்கும். அம்மா அப்பா சப்போர்ட்ல பைக் ஓட்டவும் கத்துக்கிட்டேன். ஆனாலும் கார் ஓட்டணும்னு ஆசை. என்னுடைய காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கார் ஓட்டி லைசென்ஸ் வாங்கும்போது நம்மளால இதெல்லாம் வாங்க முடியாதோன்னு வருத்தமா இருந்துச்சு.
2016-ல் மத்திய பிரதேஷ்ல ஒருத்தர் 2 கை இல்லாம கார் ஓட்டி லைசென்ஸ் வாங்கி இருக்கார். அந்த செய்தி எனக்கு இன்ஸ்பயரிங் ஆக இருந்தது. சொந்தமா மாருதி ஸ்விஃப்ட் ஆட்டோமேடிக் கார் வாங்கினேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்துல இருந்து மானியம் தராங்க. அந்த மானியத்தை பயன்படுத்தி கார் வாங்கினேன். கிரவுண்ட்ல நானே பிராக்டீஸ் பண்ணினேன். மூணு மாசம் தொடர்ந்து டிரையினிங் எடுத்துக்கிட்டேன். மெடிக்கல் சர்டிபிகேட்டிற்காக ஒரு மாசம் போனேன். ஃபிட்னஸ் எல்லாமே செக் பண்ணினாங்க. கால் பலமா இருக்கானுலாம் செக் பண்ணினாங்க. `Certificate For Ability Driving Motor Vehicle’ சான்றிதழ் ரொம்ப அவசியம். அந்த சான்றிதழ் வாங்கிட்டு ஒரு மாசம் கழிச்சு LLR அப்ளை பண்ணினேன். என்னால சுலபமா திரும்ப முடியுதா? என்னால ரோட்டுல வண்டி ஓட்டுறவங்களுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்படுதா?னு எல்லாமே செக் பண்ணிட்டு இப்ப ஓட்டுநர் உரிமம் கொடுத்திருக்காங்க. கிட்டத்தட்ட 8 மாசமா இது மட்டும்தான் வேலையா வச்சிருந்தேன். ஃபைனலி நான் ஆசைப்பட்ட மாதிரியே லைசென்ஸ் வாங்கினது சந்தோஷமா இருந்தது!” என்றவர் முகத்தில் அத்தனை பெருமிதம்.
” என்னுடைய மனைவி எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். நான் துவண்டு போனாலும் அவங்க தொடர்ந்து என்கரேஜ் பண்ணுவாங்க. ஆரம்பத்தில் வீட்ல பயந்தாங்க. நான் விளக்கிச் சொல்லவும் புரிஞ்சிகிட்டாங்க. ராகவா லாரன்ஸ் மாஸ்டர்கிட்ட ஓட்டிக் காட்டணும்னு ஆசைப்பட்டேன். அவரை ஃபேமிலியுடன் மீட் பண்ணி வண்டி ஓட்டிக் காட்டினேன். அவர் பயங்கர ஹாப்பியாகிட்டார். சாதாரணமா இருந்த என் வாழ்க்கையை மாத்தினது லாரன்ஸ் மாஸ்டர்தான். எனக்கு கீபோர்டு, டிரம்ஸ் வாசிக்க ரொம்பப் பிடிக்கும். தவிர, LLM ( The Master of Laws) ஃபைனல் இயர் படிக்கிறேன். LAW-ல் பிஹெச்டி படிக்கணும்னு ஆசை. சீக்கிரமே அந்த ஆசையும் நிறைவேறும்!” எனப் புன்னகையுடன் பகிர்ந்தார் தான்சேன்.