இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா, காப்புரிமை சர்ச்சைகள் எனக் கடந்த சில வாரங்களாக இளையராஜா பற்றிய பேச்சுக்கள், விமர்சனங்கள் பேசுபொருளாகியிருந்தன.
சமீபத்தில் வைரமுத்து இசையை விடப் பாடல் வரிகள்தான் பெரிது என்று பேசியது ‘இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா’ என்ற சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் இது பற்றிப் பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதற்கிடையில் ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ படத்தின் டைட்டில் ரிவீலிங் வீடியோவில், இளையராஜாவின் ‘வா… வா… பக்கம் வா…’ பாடல் இடம்பெற்றிருந்ததற்குக் காப்புரிமை கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதாக கோலிவுட்டில் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இளையராஜா தன் பாடலுக்குக் காப்புரிமை கேட்பது சரியா, தவறா என்றெல்லாம் பலரும் பேச, அது கோலிவுட்டில் விவாதப்பொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றைத் தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில், “என்னைப் பற்றிய வீடியோக்கள், செய்திகள் தினமும் வருவதை நண்பர்கள் மூலம் தெரிந்துகொள்கிறேன். இவற்றில் எல்லாம் நான் கவனம் செலுத்த மாட்டேன்.
மற்றவர்களின் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னுடைய வேலையில்லை. என்னுடைய வேலையில் கவனம் செலுத்துவதுதான் என்னுடைய வேலை. நீங்கள் என்னை இப்படி வாழ்த்திக் கொண்டிருக்கும் சமயத்தில், நான் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வது, விழாக்களில் கலந்துகொள்வது என என் வேலையை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் நான் ஒரு சிம்பொனியை கம்போஸ் செய்து முடித்துவிட்டேன். 35 நாள்களில் ஒரு சிம்பொனியை முழுவதுமாக முடித்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தியை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.