`கமலாலயம்’ இடம் மாறும் விவகாரம் – சக்கரவர்த்தி Vs கரு.நாகராஜன் மோதல்?! – பின்னணி என்ன?

`தமிழக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு.நாகராஜனுக்கிடையே ஈகோ யுத்தம் நடந்து வருகிறது. அதன் உச்சமாக கமலாலயம் இடமாற்றம் உள்ளிட்ட கட்சிப் பணிகள் அந்தரத்தில் நிற்பதாக’ புலம்புகிறார்கள் சீனியர்கள்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “தமிழக பா.ஜ.க-வில் இருக்கும் சீனியர்களில் ஒருவர்தான் துணை தலைவர் சக்கரவர்த்தி. முன்பு சரத்குமார் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து வந்தவர், கரு.நாகராஜன். மாற்று கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் ஆரம்பத்தில் கரு.நாகராஜனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சக்கரவர்த்தி மட்டும் ஆதரவு கரம் நீட்டினார். மேலும் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்துடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட கரு.நாகராஜன் அந்த இடத்தில் இருந்து மிக சாதுரியமாக காய்களை நகர்த்தவும் தொடங்கினார். அன்று முதல் தமிழக பா.ஜ.கவில் கரு.நாகராஜனின் வளர்ச்சி என்பது ‘ஜெட்’ வேகத்தில்தான் இருந்து வருகிறது.

கரு.நாகராஜன்

இதன் ஒருபகுதியாகவே அவருக்கு சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் பதவியும் கிடைத்தது. இதனால் கட்சிக்குள் கரு.நாகராஜன் கை ஓங்க தொடங்கிவிட்டது. இதற்கிடையில் சக்கரவர்த்தி சொல்வதை கரு.நாகராஜன் கேட்பதே இல்லை என்ற பேச்சு கிளம்பியது. இதனால், ‘வளர்த்த கிடா நெஞ்சில் பாய்ந்து விட்டது’ என சக்கரவர்த்திக்கு பெரும் அப்செட். இந்த சூழலில்தான் கமலாலயத்தை வேறு இடத்திற்கு மாற்றலாம் என முடிவு செய்தார்கள். இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதில், ‘தற்போது தி.நகரில் கமலாலயம் சிறிய இடத்தில் இருக்கிறது. எனவே விசாலமான இடத்தில் கமலாலயத்தை அமைக்க வேண்டும். 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலை புதிய அலுவலகத்தில் இருந்துதான் நாம் சந்திக்க வேண்டும்’ என சொல்லப்பட்டு இருந்தது. டெல்லியும் அதற்கு ஓகே சொல்லி விட்டது. இதையடுத்து புதிய அலுவலகத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை சக்கரவர்த்தியிடம் கொடுத்து இருக்கிறார்கள். ஏனெனில் வழக்கமாக கட்சிக்கான கணக்கு வழக்கை பார்த்து வருபவர்களில் சக்கரவர்த்திதான் முக்கியமானவர்.

பாஜக

இதையடுத்து சக்கரவர்த்தியும் பல இடங்களில் தேடி அலைந்து பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் ஒரு இடத்தை தேர்வு செய்து இருக்கிறார். அது சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை தலைமையிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு கரு.நாகராஜன், ‘பூந்தமல்லிக்கு அலுவலகத்தை கொண்டு செல்வது சரியாக இருக்காது’ என சொல்லி முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார். இதனால் அந்த திட்டம் கிடப்பிலேயே இருக்கிறது. இந்த சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போது தலைமை தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைக்க டெல்லி திட்டம் வகுத்தது.

மீண்டும் அதற்கான பொறுப்பு சக்கரவர்த்தியிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அமைக்கலாம் என முடிவு செய்தார். இதற்கும் கரு.நாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பிரச்னை கேசவ விநாயகத்திடம் சென்று இருக்கிறது. இதையடுத்து ‘அமைந்தகரையிலேயே அமைத்துக் கொள்ளலாம்’ என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமைந்தகரையில் தலைவர் அறை, முக்கிய நிர்வாகிகள் அறை, கூட்ட அரங்கம், பாராளுமன்ற தொகுதிகளுக்கான தனித் தனி கட்டுப்பாட்டு அறை போன்ற பல்வேறு வசதிகளுடன் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

இதையடுத்து இந்த அலுவலகத்தை அமைக்க சக்கரவர்த்தி கூடுதலாக செலவு செய்து விட்டார் என கரு.நாகராஜன் தரப்பு கொளுத்தி போட்டு இருக்கிறது. இந்த விவகாரம் டெல்லி வரை சென்றதால் மீண்டும் இரண்டு பேருக்கும் இடையேயான மோதல் மேலும் கூர்மை அடைந்தது. இந்த சூழலில்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக இருந்த சாம் பிட்ரோடா, தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சையானது.

எனவே இதை கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கரு.நாகராஜன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தார். இதற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் முக்கிய நிர்வாகிகள் பலரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கரு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார். மறுபக்கம் போக வேண்டாம் என சக்கரவர்த்தி சொல்லி இருக்கிறார். இதனால் எதற்கு தேவையில்லாத தலைவலி? என மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவில்லை. பிறகு தனது ஆதரவாளர்களை மட்டும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்து இருக்கிறார், கரு.நாகராஜன். இவ்வாறு இருவருக்கும் இடையில் நடந்து வரும் மோதலால் கடுப்பான சீனியர் நிர்வாகிகள் டால்பின் ஸ்ரீதரன், நாராயணன் திருப்பதி, சுமதி வெங்கடேசன் உள்ளிட்டோர் தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்” என்றனர் விரிவாகவே.

கரு.நாகராஜன்

இது குறித்து கரு.நாகராஜனிடம் விளக்கம் கேட்டோம். “பூந்தமல்லியில் அலுவலகம் அமைப்பதாகச் சொல்லும் இடத்தை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அது எந்த இடத்தில் இருக்கிறது என்றும் தெரியாது. பிறகெப்படி அதில் நான் தலையிட முடியும்… மற்றபடி பூந்தமல்லியில் கட்சி அலுவலகம் அமைக்க முடிவுசெய்து பூமி பூஜை போட்டால், கட்டாயம் நான் கலந்துகொள்வேன். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என்பதால், 600 பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பதுதான் உண்மை. சக்கரவர்த்தி அண்ணன் எனக்கு சீனியர். எனக்கும் அவருக்குமிடையே தகராறு என்பதுபோல் தவறான தகவலைப் பரப்பும் கூட்டம், எங்கள் கட்சியிலேயே இருக்கிறது. அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்றார்.

சக்கரவர்த்தி

இதையடுத்து சக்கரவர்த்தியிடம் விளக்கம் கேட்டோம். “பூந்தமல்லியில் புதிய அலுவலகம் அமைப்பதற்கான வேலையில் எந்தத் தொய்வும் இல்லை. `கரு.நாகராஜன் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்குச் செல்ல வேண்டாம்’ என்று சொன்னோம். ஏனெனில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா பேசிய அந்தச் சம்பவம் நடந்து பல நாள்கள் ஆகிவிட்டன. மேலும், பல இடங்களில் ஏற்கெனவே ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுவிட்டன. எனவேதான் வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.