“கராச்சியில் நம் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்..” – பாகிஸ்தான் எம்.பி ஆதங்கம்

இஸ்லாமாபாத்: இந்தியா நிலவு பயணம் மேற்கொள்கிறது. ஆனால், கராச்சியில் வாழ்ந்து வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர் என பாகிஸ்தான் நாட்டு எம்.பி சையத் முஸ்தபா கமல் தெரிவித்துள்ளார். புதன்கிழமை அன்று நடைபெற்ற தேசிய அவை கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். அவரது கருத்துகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.

“உலக நாடுகள் நிலவில் தரையிறங்குகின்றன. ஆனால், நமது கராச்சியில் உள்ள குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். ஒரு பக்கம் இந்தியா நிலவில் தரையிறங்கியது குறித்த செய்தி வெளியாகிறது. அடுத்த சில நொடிகளில் கராச்சி குறித்த செய்தி வெளியாகிறது.

கராச்சி பாகிஸ்தானுக்கு வருவாய் ஈட்டி தரும் பகுதியாக உள்ளது. இரண்டு துறைமுகங்கள் உள்ளன. மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் நுழைவு வாயிலாக இந்த நகரம் உள்ளது. சுமார் 68 சதவீத வருவாயை நாட்டுக்காக ஈட்டித் தரும் நகரமாக விளங்குகிறது.

இருந்தும் கராச்சிக்கு தேவையான தண்ணீர் கூட வழங்குவதில்லை. அப்படியே தண்ணீர் வந்தாலும் நீரை விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள், அதனை பதுக்கி மக்களுக்கு காசுக்காக விற்பனை செய்து வருகின்றனர்.

நாட்டில் 2 கோடியே 62 லட்சத்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. இது 70 உலக நாடுகளின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகம். நாட்டில் பல பள்ளிக்கூடங்கள் நரகமாக உள்ளன. இந்தியா இன்று வளர்ச்சி காண அந்த நாட்டில் உள்ள கல்வி முறையே காரணம்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் உலகுக்கு தேவையான விஷயங்களை தனது மக்களுக்கு போதித்தது. அதன் பலனாக இன்று பல முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர். உலக நாடுகள் அங்கு தங்களது முதலீடுகளை செய்ய முன் வருகின்றன.

ஆனால், நமது பல்கலைக்கழகத்தில் உலகுக்கு தேவையானதை நாம் போதிப்பது இல்லை. அதன் காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் நம் இளைஞர்கள் உள்ளனர்” என தனது உரையில் அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.