புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததால் 337 நாட்களாக புழல் சிறையில் இருந்து வருகிறார்.
ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில், இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேறொரு வழக்கு விசாரணையில் ஆஜராகி உள்ளார். எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செந்தில் பாலாஜி தரப்பில், மனுதாரர் 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். எனவே, வழக்கை நாளைய (மே 17) தினமே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமலாக்கத் துறை தரப்பு வாதங்களைக் கேட்காமல், இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றத்துக்கு, வரும் மே 20 முதல் ஒன்றரை மாதம் கோடை விடுமுறை என்பதால், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியுள்ள வழக்கில் ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகே முடிவு தெரியவரும்.