சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மே 23-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அன்று அவருக்கு பிரிவுபச்சார விழா நடத்தப்படவுள்ளது.
ஆங்கிலேயர் காலத்து சார்ட்டர்டு ஹைகோர்ட் என்ற பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த மும்பை அவுரங்காபாத்தைச் சேர்ந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா என்ற எஸ்.வி.கங்காபுர்வாலா 24.05.1962-ல் பிறந்தவர். எல்எல்பி தகுதிப்பட்டியலில் மூன்றாமிடம் பிடித்த இவர், கடந்த 1985-ம் ஆண்டு மும்பை பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.லோயாவின் சேம்பரில் சேர்ந்தார்.
எண்ணற்ற நிதி நிறுவனங்கள், பல கார்ப்பரேட் நிறுவனங்களில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞராகவும், பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கடந்த 2010-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2022-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 29.05.23 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து வீரரான எஸ்.வி.கங்காபுர்வாலா அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில் அம்பேத்கர் மார்த்வாடா பல்கலைக்கழக அணிக்கு இருமுறை கேப்டனாக பதவி வகித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஓராண்டு மட்டுமே இவருக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் சிரித்த முகத்துடன், சாந்த சொரூபமாக அரசியல், பொருளாதார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், ஏழை, எளியோரின் நலனைக் கருத்தில் கொண்டும், கல்வி முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்ப்புகளை பிறப்பித்துள்ளார். இளம் வழக்கறிஞர்களை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டினார்.
குறிப்பாக, தொட்டதுக்கெல்லாம் பொதுநல வழக்கு தொடருவோரின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் நோக்கிலும், விளம்பர நோக்கில் வழக்கு தொடரும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் தடாலடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.
“இனிமேல் வழக்கறிஞர்கள் யாரும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுநல வழக்குத் தொடரக்கூடாது என்றும், அடிக்கடி வழக்குத் தொடருவோர் தங்களின் நோக்கத்துக்கான உண்மைத்தன்மையை மெய்ப்பிக்கும் வகையில் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும். ஒருவேளை, வழக்கு தொடர்ந்த மனுதாரரின் நோக்கம் பாராட்டத்தக்கது என்றால் டெபாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படும். இல்லையெனில் அந்த தொகை உயர் நீதிமன்றம் சார்பில் பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தப்படும்” என அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியும் காண்பித்தார்.
தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா வரும் மே 23-ம் தேதியுடன் வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் அன்றைய தினமே பிரிவுபச்சார விழா உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள நீதிபதி ஆர்.மகாதேவன் நியமிக்கப்படவுள்ளார்.