ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு: தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்ப்பு

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைக்கப்பட்ட தனிப்படையில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு 13 நாட்களை கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த 2-ம் தேதி மாயமானார். கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து உவரி போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் தலைமையிலான 10 தனிப்படைகள் விசாரித்து வருகின்றன.

ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை. ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தே போலீஸாரால் இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை.

ஏற்கெனவே இந்த வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ.சுற்றளவில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பதிவாகியுள்ள காட்சிகளை சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயக்குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்களை சேகரித்தும் போலீஸார் ஆய்வு செய்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.