நாட்டிற்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் தனது பயணத்தை முடித்து மீண்டும் தத்தம் நாட்டிற்குத் திரும்பும் போது இலங்கைத் தேயிலை தொடர்பாக நினைவுபரிசொன்றை விமான நிலையத்தில் வைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேயிலைக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகக் கடந்த (13) விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கிணங்க சிலோன் ரி (Ceylon Tea) எனும் நாமத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு வருகை தரும் சகல சுற்றுலாப் பயணிக்கும் தமது சுற்றுலாவை நிறைவு செய்து மீண்டும் விமான நிலையத்தில் விடைபெற்றுச் செல்லும் போது இலங்கைத் தேயிலையை உள்ளடக்கியதாக நினைவுப் பரிசொன்றை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் இவ்வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதுடன் கலந்துரையாடலின் போது அதன் தனியார் தேயிலைக் கைத்தொழிலாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
அதற்காக ஏற்படும் செலவை தேயிலைச் சபை மற்றும் தனியார் துறையினால் ஈடுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவர்கள் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிடுவதற்காகவும் வருகை தருவதுடன் இலங்கையின் தேநீரின் மீது மிகவும் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகளிடையே எமது நாட்டின் தேயிலை தொடர்பாக ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வேலைத் திட்டத்தை விரைவில் அரம்பிப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தேயிலைச் சபை, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, பெருந்தோட்டத் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், தேயிலைத் தொழிலாளர்களின் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.