பிரதமர் மோடி போல பாகிஸ்தானுக்கும் வலிமையான தலைவர் தேவை: அமெரிக்கவாழ் பாக். தொழிலதிபர் கருத்து

வாஷிங்டன்: தற்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கும் நரேந்திர மோடி போல வலிமையான தலைவர் தேவை என அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானிய தொழிதிபர் சஜித் தரார் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்த சஜித் தரார் 1990-களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் டிரம்ப்பின் ஆதரவாளர். பாகிஸ்தான் ஆளும் கட்சி மற்றும் தொழிலதிபர்களிடையேயும் தராருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்ற வலிமையான தலைவர் பிரதமர் மோடி. பாகிஸ்தானுக்கும் அவரைப் போன்ற தலைவர் கிடைப்பார் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் தேர்தல் நடைபெற்று வரும் இந்த சூழலில் அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்பது எனது நம்பிக்கை. அவர் தலைமை இந்தியாவுக்கு மட்டுமல்ல ஆசியப் பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் நல்லது.

உலகளவில் உள்ள மிக குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர் மோடி. அவர் இயற்கையில் தலைமைப் பண்போடு பிறந்தவர். இக்கட்டான சூழ்நிலையிலும் பாகிஸ்தானுக்கு அரசியல் பயணம் செய்த ஒரே தலைவர் அவர்தான். எனவே, பாகிஸ்தானுடன் மீண்டும் அவர் அமைதி மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.

பணவீக்கம், பெட்ரோல் விலை உயர்வு, சர்வதேச செலாவணி நிதியம் வரியை அதிகரிக்க விரும்புவது உள்ளிட்ட ஏராளமான சவால்களை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் போராட்டத்துக்கு மின் கட்டண உயர்வே முக்கிய காரணம். அங்குள்ள மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு பாக். பிரதமர் முடிவு செய்துள்ளார். இதற்கு பணம் எங்கிருந்து வரப்போகிறது.

அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர்கள் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்றுமதியை அதிகரிப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, சட்ட ஒழுங்கை மேம்படுத்துவது ஆகியவைதான் தற்போதைய அவசிய தேவை.

பிரச்சினைகளிலிருந்து விடுவித்து நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரு தலைமைத்துவம் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.