முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாண பணிகள்…..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு நேற்று (15/05/2024) அடிக்கல் நாட்டப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நிலத்தடி நீரினால் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதிகளில் மூன்று வீதமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக பாதிப்புக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

வவுனிக்குளம் நீர்தேக்கத்திலிருந்து நீரை பெறுகின்ற கரும்புள்ளியான் குளத்திலிருந்து , புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மேற்பரப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

உலக வங்கியின் 1856 மில்லியன் ரூபா நிதி அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 35 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 6968 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.