'ரேபரேலி தொகுதியும் நேரு குடும்பமும்’ – ரேபரேலியை ராகுல் தேர்ந்தெடுத்த பின்னணியும் களநிலவரமும்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ பதிவில், “நாட்டின் பிற பகுதிகளுடன் ரேபரேலியை இணைக்க திட்டமிட்டுள்ளேன். என் அம்மா சோனியா காந்தி மற்றும் என் பாட்டி இந்திரா காந்தி செய்த பணிகளை நான் முன்னெடுத்துச் செல்வேன். எங்கள் குடும்பம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுடன் 100 ஆண்டுகளுக்கும் மேலான உறவைக் கொண்டுள்ளது. அன்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தில், இந்த உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. அமேதி, ரேபரேலி எங்களை அழைக்கும்போதெல்லாம், நாங்கள் அங்கு இருப்போம்.

ராகுல் காந்தி – காங்கிரஸ்

இது ஒரு குடும்பம், நட்பு மற்றும் பாசம் போன்றது. எனது தாய் மற்றும் சகோதரியுடன் எனக்கு என்ன உறவு இருக்கிறதோ, அதே உறவு எனக்கு ரேபரேலியுடன் உள்ளது. அங்குள்ள உணவு மற்றும் அங்கு செய்யப்படும் ‘அர்ஹர் கி டால்’ எனக்கும் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை அமேதியும் ரேபரேலியும் ஒன்றுதான். என் அம்மாவுடன் இருக்கும் பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது, என்னாலும் என் அம்மாவாலும் முன்னெடுத்துச் செல்லப்படும் ​​இந்த சேவைப் பாரம்பரியத்தைத் தொடங்கி வைத்த எனது தந்தை மற்றும் பாட்டியின் நினைவும் எனக்கு வந்தது.

ரேபரேலியும் அமேதியும் எங்களுக்கு வெறும் தொகுதிகள் அல்ல, அவை எங்களின் ‘கர்மபூமி’, ஒவ்வொரு மூலையிலும் தலைமுறைகளின் நினைவுகளைத் தாங்கி நிற்கும். 1982-ம் ஆண்டு எனது தந்தை அங்கு சென்றபோது கடுமையாக உழைத்து பல வளர்ச்சிப் பணிகளை தொடங்கி அமேதியை முழுவதுமாக மாற்றினார். ரேபரேலியில், என் பாட்டி நிறைய வளர்ச்சியைத் தொடங்கினார், அது அமேதியை விட முன்னோடியாக இருந்தது. ஆனால், என் தந்தை அமேதிக்குச் சென்றபோது, ​​அவர் நிறைய வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார், பின்னர் அமேதி ரேபரேலியை விட முந்தியது போல் இருந்தது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, நானும் எனது தாயும் இணைந்து பல பணிகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக சாலை இணைப்பை உறுதி செய்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகளை அமைத்துள்ளோம். சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி, லட்சக்கணக்கான பெண்களுக்கு உதவி செய்து இருக்கிறோம். இதன் மூலமாக அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளோம். மேலும் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் சிஆர்பிஎஃப் பயிற்சி முகாம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளோம். ஆனால் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கும் திட்டத்தை பாஜக தடுத்து நிறுத்திவிட்டது. அது செயல்பாட்டுக்கு வந்து இருந்தால் அமேதி மற்றும் ரேபரேலியின் முகத்தை மாற்றியிருக்கும் என்று நான் உணர்ந்தேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல சோனியா காந்தி, “1982-ம் ஆண்டு அமேதிக்கு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்காகச் சென்றபோது தான் அங்கு செல்லத் தொடங்கினேன். டெல்லியில் இருந்து பல நல்ல மருத்துவர்கள் எப்போதும் அங்கு பணியாற்றி உதவி வழங்கி வருகிறார்கள். 1921-ம் ஆண்டு இப்பகுதியுடன் இந்த அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் பண்டிட்ஜி. விவசாயி தலைவர் பாபா ராம் சந்திரா தனது துயரத்தை பண்டிட்ஜியிடம் பகிர்ந்து கொண்டார். ராகுலின் தாத்தா ஃபெரோஸ் காந்தி 1952-ம் ஆண்டு ரேபரேலி எம்.பி.யாக இருந்தார்.

உ.பி

அவர் இறந்த பிறகு ராகுலின் பாட்டி இந்திரா காந்தி ரேபரேலியை பிரதிநிதித்துவப்படுத்தினார். நாங்கள் திருமண நிகழ்ச்சிகளின் போதும், மரணத்தின் போதும் கிராமம், கிராமமாகச் செல்வோம். வெள்ளம் அல்லது வறட்சியின் போதும் கூட கிராமங்களுக்குச் செல்வோம். அவர்கள் என்னை உடனடியாக ஏற்றுக்கொண்டனர், நான் ஒரு மகள் மற்றும் மருமகள் போன்ற உறவைப் பகிர்ந்து கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவ்வளவு தூரம் உணர்ச்சிபூர்வமாக சோனியா, ராகுல் காந்தி பேசுவதற்கு காரணமாக இருக்கும் ரேபரேலி தொகுதி அவர்களுக்கு என்னதான் செய்தது?. அமேதியை கைவிட்டுவிட்டு ரேபரேலிக்கு ராகுல் மாறுவதற்கு என்ன காரணம் என்கிற கேள்விகளுடன் காங்கிரஸ் வியூக வகுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம், “உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி காங்கிரஸின் கோட்டைகளாக இருக்கின்றன. இந்த சூழலில்தான் வயது மூப்பின் காரணமாக சோனியா காந்தி, ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

இதனால் ரேபரேலி, அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் வாரக்கணக்கில் நிலவி வந்தது. ஒருவழியாக வெளியான வேட்பாளர் பட்டியலில், யாரும் எதிர்பார்க்காத விதமாக ரேபரேலிக்கு மாறியிருந்தார், ராகுல் காந்தி. அதே நேரத்தில் ஏஐசிசி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தேர்தலில் போட்டியிடவில்லை. நேரு குடும்பத்தின் செல்வாக்கு மிக்க பிரதிநிதியான கிஷோரி லால் சர்மா அமேதியில் களம் இறக்கப்பட்டார். முன்னதாக ராஜ்யசபா உறுப்பினராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதும், அங்கு ராகுல் காந்தியை நிறுத்துவதற்கு முடிவு செய்தோம்.

ஆனால் அவர் ‘ரேபரேலியில் வெற்றி பெற்றால் வயநாட்டை விட்டு என்னால் வெளியேற முடியாது” என்றார். மறுபக்கம் பிரியங்காவிடம் கேட்ட போது, “ஏற்கெனவே சோனியா ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். இந்த நேரத்தில் ராகுல், பிரியங்கா இருவரும் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் நேரு குடும்பத்தை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். அப்போது பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்யும். எனவே தேர்தலில் போட்டியிட முடியாது. பிரசாரம் மட்டும் மேற்கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து அவர்களிடம் “நீங்கள் இருவரும் இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியிலிருந்து போட்டியிடாதது தேர்தலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தோம். இதன்படி ஒருவழியாக ராகுல் ஒப்புக்கொண்டார்” என்றனர்.

இந்திரா காந்தி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேசிய அரசியல் நோக்கர்கள், “ரேபரேலி தொகுதி காங்கிரஸூக்கு மிகவும் முக்கியமானது. கடந்த 1952, 1957-ம் ஆண்டுகளில் ரேபரேலியில் இருந்து தான் பெரோஸ் காந்தி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இதே தொகுதியில் 1967, 71-ல் போட்டியிட்ட இந்திரா காந்தி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அவசர நிலைக்கு பிறகு 1977-ல் நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார். பிறகு நடந்த தேர்தலில் சஞ்சய் காந்தி கைப்பற்றினார். அவரது மறைவுக்கு பிறகு 1981-ம் ஆண்டு இதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றார் ராஜிவ் காந்தி. அதற்கு பின் அவர் இறக்கும் வரை இதே தொகுதியில் தொடர் வெற்றிகளை பெற்று மக்களவை உறுப்பினராக நீடித்து வந்தார்.

பிறகு அரசியல் களத்துக்கு வந்த சோனியா காந்திக்கும் ரேபரேலி தொகுதி மக்கள் வெற்றியை பரிசாக கொடுத்தார்கள். இந்த தொகுதியில் 2004 முதல் 2024 வரை கிட்டத்தட்ட 20 வருடங்களாக சோனியா காந்தியே மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். குறிப்பாக கடந்த 2019 தேர்தர்தலில் உ.பியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி இதுவாகும். இந்தமுறையும் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதாவது ரேபரேலியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் பச்ரவன், ஹர்சந்த்பூர், சரேணி, ஊஞ்சஹர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சினர் எம்.எல்.ஏ-க்களாக இருக்கின்றனர். இதுவும் ராகுலுக்கு கூடுதல் பலம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.