கேரள மாநிலம், கோழிக்கோடு செறுவன்னூரைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, கையில் ஆறாவதாக ஒரு விரல் இருந்தது. கூடுதலாக இருந்த அந்த விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் – சேய் நலப்பிரிவில் சிறுமி நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை முடித்து ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த சிறுமியின் வாயில் பஞ்சு வைக்கப்பட்டிருந்ததை உறவினர்கள் பார்த்தனர். அதுகுறித்து உறவினர்கள் கேட்டபோது, தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மன்னிப்புக் கோரியுள்ளார் மருத்துவர். பின்னர், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஆறாம் விரல் அகற்றப்பட்டது.
தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினரிடம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சூப்பிரன்டண்ட் பேச்சு வார்த்தை நடத்தினார். மற்றொரு குழந்தைக்கு நாவில் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்திருந்த நிலையில், தவறுதலாக 4 வயது சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், “குழந்தை அழும்போது நாக்கில் சிறு கட்டி இருந்ததை பார்த்தோம். முதலில், நாக்கில் அறுவை சிகிச்சை செய்தோம். பின்னர், மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் ஆறாம் விரலை அகற்றினோம். நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை” என்றனர்.
அதே சமயம், குழந்தைக்கு பேசுவதில் இதற்கு முன்பு எந்த பிரச்னையும் இல்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ’இந்த அறுவை சிகிச்சை மூலம் எதிர்காலத்தில் குழந்தைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். இதுபோன்று இனி ஒரு குழந்தைக்கும் ஏற்படக்கூடாது’ எனக் கூறிய சிறுமியின் தந்தை, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதற்கு முன்பு, ஒரு பெண்ணுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவ உபகரணம் ஒன்றை வைத்து தையல் போட்ட சம்பவம் இதே கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்துள்ளது. இப்போது, சிறுமிக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கை விரலுக்கு பதில் சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட புகாரில், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.