புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு குடும்பத்தினர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றதால் நேற்று முன்தினம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியின்படி குடியுரிமை திருத்தசட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி முதல்முறையாக 300 பேருக்கு இந்தியக் குடியுரிமை சான்றிதழை மத்திய அரசு நேற்று முன்தினம் வழங்கியது.
இதையொட்டி டெல்லி ஆதர்ஷ் நகர் முகாமில் உள்ள மாதோ பாய் தாக்கூரின் வீட்டில் நேற்று முன்தினம் கொண்டாட்டம் களை கட்டியது. அவரது வீட்டில் மாதோ, அவரது மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் என 5 பேர் குடியுரிமை சான்றிதழை பெற்றிருந்தனர்.
மாதோவுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பூக்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர். பெண்கள், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என முழக்கமிட்டனர். ஆண்கள் உற்சாக நடனம் ஆடினர். பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர்கள் புகழ்ந்து பேசினர்.
மாதோவின் மகள் பாவனா (18) கூறும்போது, “இது எங்கள் புதிய வாழ்க்கையின் முதல் நாள். இதுவரை நாங்கள் இந்திய குடிமக்கள் இல்லை. இதனால் அனுமதியின்றி வெளியில் செல்லபயந்தோம். இனி அந்தக் கவலைஇல்லை. நாங்கள் சுதந்திரமாக உணர்கிறோம். எங்கள் உறவினர்களை சந்திக்க குஜராத் சென்றுவர உள்ளோம்” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் இருந்து இந்தக் குடும்பம் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு புனித யாத்திரை வந்தது. அப்போது இங்கேயே தங்கிவிட முடிவு செய்தது. டெல்லி ஆதர்ஷ் நகர் முகாமில் சிந்துவில் இருந்து வந்த சிலரை இந்தக் குடும்பம் அறிந்திருந்தது.
இதனால் ஆதர்ஷ் நகரில் கூடாரம் அமைத்து தங்கியது. பிறகு செங்கல் சுவர் வீடாக மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.