இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான, `அடல் சேது’ பாலம் கடந்த ஜனவரி மாதம் மும்பையில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
ஆறுவழிச் சாலையாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம், மொத்தம் 21.8 கி.மீ நீளம்கொண்டது. இதில், 16.5 கி.மீ தூரம் கடலில் கட்டப்பட்டிருக்கிறது. மும்பையின் செவ்ரி பகுதியில் தொடங்கி, நவி மும்பையின் நவசேவா துறைமுகத்தை இந்தப் பாலம் இணைப்பதால், `மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.
கடந்த மே 14ம் தேதி இப்பாலத்தில் பயணித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, “‘அடல் சேது’ பாலம், மும்பை – நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழிப் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. இதெல்லாம் சாத்தியமாகும் என யாராவது நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டோம்.
கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் மிகச் சிறப்பாகயிருக்கிறது.
இளம் தலைமுறையைக் கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. இதை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இளம் பாரதியர்கள் (இந்தியர்கள்) நாட்டின் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
ராஷ்மிகாவின் இந்த வீடியோவை தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை விட மனதிற்கு மகிழ்ச்சியான விஷயம் வேறேதுமில்லை” என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.