சென்னை: கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மழைக்காலத்தில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் போதுமான அளவு பேருந்துகளை இயக்கிட தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பேருந்துகளை மிகவும் கவனமாக இடைவெளி விட்டு இயக்க வேண்டும். சாலையில் மின்கம்பி மற்றும் மரங்கள் அறுந்து விழுந்து உள்ளதா என்பதை கவனித்து பேருந்துகளை இயக்க வேண்டும். கனமழையின் போது அரசு அறிவிக்கும் முன்னறிவிப்பு மற்றும் நிலைமைக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்துகளை இயக்க வேண்டும். கடலோர பகுதிகளில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மே.20 வரை மழை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.