பாரபங்கி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள், ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி, “நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும், இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய இண்டியா கூட்டணி ஒரு புறமும் உள்ளன. தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிய முடிய, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர்.
சமாஜ்வாதி இளவரசர் (அகிலேஷ் யாதவ்) புதிய அத்தையிடம் (மம்தா பானர்ஜி) தஞ்சம் அடைந்துள்ளார். இந்த புதிய அத்தை, வங்காளத்தில் இருக்கிறார். இந்த அத்தை, நான் உங்களுக்கு ஆதரவளிப்பேன் ஆனால் வெளியில் இருந்துதான் ஆதரிப்பேன் என்று இண்டியா கூட்டணியிடம் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். இது எப்படி சாத்தியமாகும் என்று சிலர் நினைக்கலாம். குழப்பம் அடைய வேண்டாம். சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்க முடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அவர்களின் கடந்தகால செயல்பாடுகள் அப்படிப்பட்டவை. அவர்களைப் பொறுத்தவரை, நாடு பெரிதல்ல. குடும்பமும் அதிகாரமும்தான் அவர்களுக்கு எல்லாம்.
சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘ராம் லல்லா’வை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்புவார்கள். ராமர் கோவில் மீது புல்டோசரை ஏற்றுவார்கள். எங்கே புல்டோசரை ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றக்கூடாது என்பது குறித்து அவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பாடம் படிக்க வேண்டும்.
யோகி ஆதித்யாந்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் காரணமாக, இப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பரிசுப் பொருட்களை தேர்வு செய்வதற்கு எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதிருக்கவில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசுகளுக்காக 5-6 பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.