தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடைமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாவரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சீசன் தொடங்குவதற்கு முன்பே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், குற்றாலம் பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் குளிர்ந்த சீதோசனநிலை நீடித்ததால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அதன்படி, பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் தங்களை தற்காத்து கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களை தேடி தலைத்தெரிக்க ஓடினர். பாதுகாப்பு கம்பி வளையங்களையும் தாண்டி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளப்பெருக்கால் அருவிக்கு செல்லும் பிரதான சாலைகளில் வெள்ளநீர் ஆர்பரித்து சென்றது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் சிறுவன் உள்பட ஐந்து சுற்றுலா பயணிகள் மாயமானார்கள்.
தொடர்ந்து வெள்ளப்பெருக்கு குறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு மீட்பு படையினர், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளையும் மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மாயமான ஐந்து சுற்றுலா பயணிகளில் நான்கு பேர் திரும்பி வந்த நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் என்பவரை தேடி கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சம்பவஇடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், வெள்ளப்பெருக்கில் மாயமான சிறுவனை தேடி கண்டுபிடிக்கும் பணியை முடுக்கிவிட்டார். தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு அருவியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மாயமான சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் சுற்றுலாவுக்கு வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து பேரருவி உட்பட குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb