சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வரும் மே 31-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது. அதேநேரம் தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி, ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் கூறும்போது, வலு குறைந்து வரும் எல்நினோ நிகழ்வு, இயல்பைவிட குறைவான வடகோள உறைபனிப்பகுதிகள், வலுவாகி வரும் நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருதுளை நிகழ்வு என பல சாதகமான காரணிகள் இருப்பதால், இந்த ஆண்டு இந்திய அளவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
கனமழை வாய்ப்பு: இதற்கிடையே, தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.