மதுரை: சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் அமர்வு, “சிறுமிகள் மாயம் தொடர்பான வழக்குகளில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களின் பாதுகாப்புக்காகத் தான் காவல்துறை உருவாக்கப்பட்டது.
ஆனால், காவல் துறையின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை. தங்களை பலப்படுத்திக் கொள்ளவும் வளப்படுத்திக் கொள்ளவுமே முக்கியம் அளிப்பது போல் காவல் துறையின் செயல்பாடு உள்ளன.
சிறுமிகள் மாயமான அல்லது கடத்தப்பட்ட புகார் வந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் விசாரணை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.