தென் மாநிலங்களை தனி நாடாகக் கருதுவது கண்டனத்துக்குரியது: அமித் ஷா

புதுடெல்லி: இந்தியாவை இனி யாராலும் பிரிக்க முடியாது. யாரேனும் வடக்கு – தெற்கு என்று பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசினால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகப் பேட்டி ஒன்றில் அமித் ஷா கூறியிருப்பதாவது: இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை. இப்போது நாட்டு மக்கள் காங்கிரஸின் கொள்கை என்னவென்று யோசிக்க வேண்டும். யாரேனும் தென் மாநிலங்களை தனி நாடு என்ற தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தனிபெருங் கட்சியாக பாஜக வாகை சூடும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடந்த வாரம் பிஆர்எஸ் தலைவர் கேடி ராமா ராவ் அளித்த பேட்டி ஒன்றில், “வட இந்தியா என்பது முற்றிலும் வேறொரு தேசம். அது ஒரு தனி உலகம். நான் இதனை பிரச்சினைகளின் அடிப்படையில் சொல்கிறேன். தென் மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முற்றிலும் மாறுபட்டவை. இங்குள்ள மக்களின் சிந்தனையும் மாறுபட்டது. அதனால்தான் பாஜகவால் தென் மாநிலங்களில் காலூன்ற முடியவில்லை.” என்று கூறியிருந்தார். அதற்கு தான் அமித் ஷா தற்போது இவ்வாறாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சிறந்த அந்தஸ்து ரத்து சரியே!: மேலும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது சரியே என்று கூறிய அமித் ஷா காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சரியான முடிவு என்பதற்கான சாட்சிதான் காஷ்மீரில் பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் என்றார். வெறும் 14 சதவீதம் இருந்த வாக்கு சதவீதம் இந்தத் தேர்தலில் 40 சதவீதமாக அதிகரிக்க இந்த நடவடிக்கையே காரணம். பிரிவினைவாத குழுக்களின் தலைவர்கள் கூட வாக்களித்துள்ளனர். அவர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பது அவர்களின் உரிமை சார்ந்தது. ஆனால் ஜனநாயகக் கடமையில் பங்கேற்றனரே அதுவே வரவேற்புக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவால் விடுதலையால் பயனில்லை.. கேஜ்ரிவால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது இண்டியா கூட்டணி பிரச்சாரத்துக்கு வலு சேர்க்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள அமித் ஷா, “கேஜ்ரிவால் விடுதலையால் எந்தப் பயனும் இல்லை. அவர் எங்கு சென்றாலும் மக்களுக்கு அவர் மீதான மதுபான கொள்கை ஊழல் வழக்கே நினைவுக்கு வரும். அவர் பஞ்சாப் சென்றால் அங்குள்ள மக்கள் கண்களின் முன்னால் ஒரு பெரிய சைஸ் பாட்டில் தான் தெரியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.