புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியை, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்திய ஆண்கள் அணியில் ஏ.சரத் கமல், ஹர்மீத் தேசாய், மானவ் தாக்கர் ஆகியோரும், இந்திய பெண்கள் அணியில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் வீரர்கள் சரத் கமல், ஹர்மீத் தேசாயும், வீராங்கனைகள் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் அணியின் மாற்று வீரராக சத்யனும், பெண்கள் அணியின் மாற்று வீராங்கனையாக அஹிகா முகர்ஜியும் செல்கிறார்கள்.
அணியினருடன் செல்லும் அவர்கள் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான பிரத்யேக விளையாட்டு கிராமத்தில் தங்க முடியாது. வீரர்கள் யாருக்காவது காயம் எற்பட்டு மாற்று வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் தான் அவர்கள் விளையாட்டு கிராமத்துக்குள் நுழைய முடியும். ஆண்கள் அணியின் கேப்டனான சென்னையை சேர்ந்த 41 வயதான சரத் கமல் தனது 5-வது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.