மும்பையில் திடீரென வீசிய புழுதிப்புயல் காரணமாக காட்கோபரில் பெட்ரோல் பம்ப் மீது ராட்சத விளம்பர போர்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெட்ரோல் பம்பில் மழைக்கு ஒதுங்கிய 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 16 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டனர். மேலும் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்துள்ளான விளம்பர போர்டை ஈகோ மீடியா என்ற நிறுவனம் தான் அமைத்து இருந்தது. விபத்து நடந்த பிறகு ஈகோ மீடியாவின் இயக்குனர் பாவேஷ் பிண்டே தலைமறைவாகிவிட்டார். அவர் மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர்.
விசாரணயில் அவர் லோனவாலா சென்றது தெரிய வந்தது. அவர் லோனவாலாவில் இருந்து மீண்டும் தனது காரில் மும்பை வந்து அங்கிருந்து காரில் குஜராத் வழியாக ராஜஸ்தான் சென்றார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் நடவடிக்கையை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பாவேஷ் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் சென்றார். அடிக்கடி பாவேஷ் தனது பெயரையும், இடத்தையும் மாற்றி மாற்றி தனது மும்பை உறவினர் ஒருவருக்கு போன் செய்து பேசினார். அதோடு தனது ஆதார் கார்டை பயன்படுத்தி ஹோட்டலில் அறை முன்பதிவு செய்தார்.
அப்போது ராஜஸ்தான் போலீஸார் துணையோடு பாவேஷ் கைது செய்யப்பட்டார். அவர் உடனே மும்பைக்கு கொண்டு வரப்பட்டு காட்கோபர் பந்த் நகர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விளம்பர போர்டு விழுந்தது குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் பாவேஷிற்கு அவரது நண்பர் ஒருவர்தான் போன் செய்து உஷார்படுத்தினார்.
அதனை தொடர்ந்தே வெறும் 20 ஆயிரம் பணத்துடன் பாவேஷ் தனது காரில் தப்பிச்சென்று இருக்கிறார். அதோடு பாவேஷ் தனது மொபைல் போன் ஒன்றை உடைத்து சேதப்படுத்திவிட்டார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். விபத்துள்ளான விளம்பர போர்டுக்கு அனுமதி கொடுத்த முன்னாள் ரயில்வே போலீஸ் கமிஷனர் காலித்திற்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். காலித் டிஜிபியிடம் ஒப்புதல் பெறாமல் விளம்பர போர்டுக்கு ஒப்புதல் கொடுத்து இருந்தார். மும்பையில் அதிகபட்சமாக 40×40 சதுர அடிக்கு மட்டுமே விளம்பர போர்டு வைக்க அனுமதி இருக்கிறது. ஆனால் காலித் 120×120 சதுர அடி விளம்பர போர்டுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88