பாஜக ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் டெல்லியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் சேவை வழங்கப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், கல்லூரி முடித்த பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கிறது. இன்றும் கூட பள்ளி, கல்லூரி முடித்தவுடனேயே பெண்களைத் திருமணம் செய்துவைக்கும் சூழலில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் பெண்களை சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

இப்படியிருக்க, தெலங்கானாவில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் எல்&டி நிறுவனம், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தால் 2026-க்கு பிறகு பங்குகளை விற்பதற்கு பரிசீலிப்பதாக சமீபத்தில் கூறியிருந்தது.

இதுகுறித்து எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன், `காங்கிரஸ் அரசின் (தெலங்கானா) இலவசப் பேருந்து பயணத் திட்டம் மாநில நிதி உயர்வுக்கு உதவப் போவதில்லை. பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து திட்டம் பொது போக்குவரத்தில் பாலின வேறுபாட்டுக்கு வழிவகுக்கிறது. மேலும், இந்தத் திட்டத்தால் மெட்ரோவில் பெண் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. எனவே, கடன் சுமையை குறைக்க 2026-ல் இதை விற்பதற்காகப் பரிசீலிக்கிறோம்’ என்று கூறியிருந்தார்.
மேலும், தெலங்கானாவில் மெட்ரோ சிஸ்டத்தை 65 ஆண்டுகள் இயக்க எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் தொடர்பாக மாநில அரசை பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார்.

தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய மோடி, “தேர்தலுக்காக மாநில அரசின் கஜானாவை காலி செய்யும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு இல்லை. நீங்கள் ஒரு நகரத்தில் மெட்ரோவைக் கட்டுகிறீர்கள், பின்பு, அதே நகரத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வாக்குறுதியளிக்கிறீர்கள். இதன் பொருள், மெட்ரோ பயணிகளில் 50 சதவிகிதம் பேரை நீங்கள் வெளியே எடுக்கிறீர்கள்” என்று விமர்சித்தார்.