Election Review: உள்ளாட்சித் தேர்தலைக் களமாக வைத்து ஒரு அரசியல் த்ரில்லர்; டெபாசிட்டாவது பெறுகிறதா?

அரசியல் வேண்டாமென ஒதுங்கி நிற்கும் ஒருவனின் வாழ்வில் அரசியல் தலையிட, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வட ஆற்காடு பகுதியை மையமாக வைத்துப் பேசுவதே `எலெக்சன்’ படத்தின் ஒன்லைன்.

கட்சி துண்டு இல்லாமல் வெளியே செல்லாத அளவுக்குக் கட்சிக்கு விசுவாசமானவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியம்). அவரது நண்பர் தணிகாசலம் சுயேச்சையாக நின்ற போதும், கட்சிக்கே ஆதரவைத் தெரிவித்து நட்பை முறித்துக் கொள்கிறார். 40 வருட அரசியல் பணி இருந்தும் நல்லசிவத்துக்குச் சொந்த கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் உள்ளூரில் அவமானப்படும் தந்தையின் மானத்தைக் காப்பாற்ற அடுத்த தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்குகிறார் அவரின் மகன் நடராசன் (விஜய் குமார்). அரசியல் களத்துக்குப் புதிதாக வரும் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, அதனால் அவர் குடும்பம் என்னவானது என்பதை உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்துப் பேசியிருப்பதே ‘எலெக்சன்’ படத்தின் கதை.

Election Review

ரௌத்திரமான இளைஞராக வழக்கம் போல மிளிரும் விஜயகுமார், காதல் காட்சிகளில் வலிந்து ரொமான்ஸ் செய்யும் உணர்வைத் தருகிறார். (ஸ்மைல் பண்றது மட்டுமே ரொமான்ஸ் இல்ல ப்ரோ!) க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னாள் நீண்ட வசனத்தை பேசுமிடத்தில் மட்டும் யதார்த்தமாக ஸ்கோர் செய்கிறார். நாயகி ப்ரீத்தி அஸ்ரானி முதல் பாதியில் பாடல் காட்சிகளில் மட்டும் வந்துபோகிறார். இரண்டாம் பாதியில் மட்டுமே அவரின் பாத்திரம் கொஞ்சம் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. எல்லா பிரச்னைக்கும் தொடக்கப்புள்ளியாக இருக்கும் வலுவான கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியம், ஆனால் அதற்கான கணத்தை அவரால் சரியாகத் தாங்கமுடியவில்லை. உணர்ச்சிகளைக் கையாண்ட விதத்தில் ‘வத்திக்குச்சி’ தீலிபனுக்கு இது பெயர்ச் சொல்லும் படமாக இருக்கும். கதையை நகர வைக்கும் முக்கிய பாத்திரத்தில் பாவல் நவகீதன் நடிப்பில் குறையேதுமில்லை.

கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜுவின் ட்ரோன் ஷாட்களில் காட்டப்படும் நிலப்பரப்பின் பிரமாண்டம், சாதாரண காட்சிகளிலும் முக்கியமாக எழுத்திலும் மிஸ்ஸிங். அதிலும் கலை இயக்குநர் ஏழுமலை ஆதிகேசவன், திருவிழா, உணவகம் எனத் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறு இடத்தில் காட்டிய உழைப்பினை இன்னுமே சிறப்பாகப் படம்பிடித்திருக்கலாம். படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார் முதல் பாதியின் மேல் இத்தனை கருணை காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை.

`சேத்துமான்’ இயக்குநர் தமிழ், தன் முதல் படப் பாணியிலிருந்து முற்றிலும் விலகி, இந்த `எலெக்சன்’-ஐ சற்றே கமர்ஷியல் பாணியில் அணுகியிருக்கிறார். இம்முறை மக்களுக்கு நெருக்கமான தேர்தலாகப் பார்க்கப்படுகிற உள்ளாட்சித் தேர்தலைக் களமாக எடுத்தவர், திரைக்கதை வடிவமைத்த விதத்தில் மக்களை விட்டுத் தொலைவாகவே நிற்கிறார். இதில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் பாடல்கள், பிரசார மாநாட்டில் ட்ராபிக் சிக்கனலில் மாட்டிக்கொண்ட உணர்வைத் தருகிறது.

Election Review

“தங்கத்துல ஊசின்னாலும் கண்ணுல குத்திக்க முடியுமா?”, “செல்வாக்கா வாழ்ந்த குடும்பம், செல்லரிக்க வெச்சிடாதீங்க’ என அழகிய பெரியவனின் இலக்கிய பாணியிலான வசனங்கள் சற்றே உவமைகள் கூடி ஓவர் டோஸேஜ் ஆகிவிடுகின்றன. அரசியல் ஏரியாவிலும் ஆழமான வசனங்கள் மிஸ்ஸிங்!

பெற்ற மகனைத் தாண்டி தான் இருக்கும் கட்சியைத் தந்தை எதற்காக நேசிக்கிறார், அவரை எதிர்த்து நிற்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், அந்தப் பதவியை ஏன் உயிரே போகும் அளவுக்கான கௌரவமாகப் பார்க்கிறார் என்பதற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. இதனால் இந்தக் கதாபாத்திரங்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் நம்மை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்கவில்லை. உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை நடக்கும் முறையைக் காட்சிப்படுத்திய விதத்தில் இருக்கும் நேர்த்தி பிற காட்சிகளிலும் இருந்திருக்கலாம்.

சாதிய, சமூக பிரச்னையைக் கதையினூடே பேசி இருக்கும் இயக்குநரின் நல்ல எண்ணம் சரிதான். ஆனால் அதை ஏற்கெனவே அந்த அரசியலைத் தெரிந்தவர்களுக்காக மட்டும் எடுக்காமல், சாமானியர்களையும் கொஞ்சம் கருத்தில் கொண்டிருக்கலாம். நல்ல கருத்துகள் பிரசார மேடைக்குச் சரியாக இருக்கலாம், ஆனால் படத்திற்கு அது மட்டுமே போதாது படைப்பாளர்களே! அதற்குத் தேர்ந்த திரைக்கதையும், கதைமாந்தர்களின் அழுத்தமான பின்னணியும், கடைசிவரை நம்மை ஆர்வத்துடன் பார்க்கவைக்கும் பரபரப்பும் அவசியம்தானே?!

Election Review

மொத்தத்தில் வஞ்சகம், சூழ்ச்சி என நகரும் உள்ளாட்சித் தேர்தலில் சிக்கித் தவிக்கும் ஓர் சாமானிய மனிதனின் நுண்ணுணர்வை மேலோட்டமாக அணுகியிருந்தாலும், இதுவரை பார்க்காத வகையில் அந்தக் களத்தினை காட்டியிருப்பதால் இந்த ‘எலெக்சன்’ தனது டெபாசிட்டை மட்டும் காப்பாற்றிக் கொள்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.