Inga Naan Thaan Kingu Review: காமெடியில் சாதிக்கும் சந்தானம் & கோ; படமாக க்ளிக் ஆகிறதா?

திருமணத் தகவல் மையத்தில் வேலை பார்க்கும் வெற்றி (சந்தானம்), சொந்தமாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கியதில் 25 லட்ச ரூபாய் கடனில் உள்ளார். ஆதரவற்றவரான அவரை மணந்துகொள்ளப் பெண்ணையும் கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையும் தரும் வரனைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரத்னபுரி ஜமீனான விஜய்குமார் (தம்பி ராமையா) தன் மகளான தேன்மொழியை (பிரியாலயா) வெற்றிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் அக்குடும்பமே ஏற்கெனவே கடனிலுள்ள குடும்பம் என்பது வெற்றிக்குத் தெரிய வருகிறது. தேன்மொழியோடு, ஜமீன் விஜய்குமாரும் அவரது மகன் பாலாவும் (பால சரவணன்) வெற்றியின் வீட்டில் ‘வீட்டோடு மாமனார், மச்சானாக’ குடியேறுகிறார்கள்.

இந்தக் கலாட்டா குடும்பத்தால் மிகப்பெரிய பிரச்னை ஒன்றில் மாட்டிக்கொள்ளும் வெற்றி, அப்பிரச்னையை இதே குடும்பத்தை வைத்து எப்படிச் சரி செய்கிறார் என்பதை காமெடி கதகளியாகச் சொல்கிறது இயக்குநர் ஆனந்த் நாராயணின் `இங்க நான் தான் கிங்கு’.

Inga Naan Thaan Kingu Review

ஆக்‌ஷன், காமெடி, காதல், நடனம் என எல்லாவற்றையும் அளவாகத் தொட்டுச் செல்லும் வெற்றி கதாபாத்திரத்தை, தன்னுடைய கூலான ஸ்டைலில் குறைவின்றி செய்திருக்கிறார் சந்தானம். முக்கியமாக, ஒன்லைன் கவுன்ட்டர்கள் அடிக்கும் இடங்களில் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். கதாநாயகி பிரியாலயா கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு அடுத்தபடியாக கைதட்டல் வாங்கும் தம்பி ராமையா, தனது அப்பாவித்தனமான காமெடிகளாலும் ‘அடப்பாவி’ தனமான தொந்தரவுகளாலும் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் ஓவர் டோஸாக இருந்தாலும், அது குறையாகத் தெரியவில்லை.

டெரராகவும், காமெடியாகவும் மாறி மாறிப் பயணிக்கும் கதாபாத்திரத்தில்(ங்களில்) தேவையான பங்களிப்பை அளித்திருக்கிறார் விவேக் பிரசன்னா. பிணமாக அவரின் நடிப்பு அட்டகாசம்! பால சரவணன், முனீஸ்காந்த்தோடு, சேஷு, கூல் சுரேஷ், மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட சந்தான காமெடி யுனிவர்ஸின் ஏஜென்ட்களும் ஒரு கலகலப்பான காமெடி படத்திற்கான சேட்டைகளைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

Inga Naan Thaan Kingu Review

ஓம் நாராயணனின் ஒளிப்பதிவும், எம்.தியாகராஜனின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. டி.இமான் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘குலுக்கு குலுக்கு’ பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. ‘வழக்கமான’ டி.இமான் பாடலாக ஒலிக்கும் மற்ற பாடல்கள் ஒன்றுக்கும் உதவாத படத்தின் ரத்னபுரி ஜமீன் கணக்காக மாறி படத்தின் ஓட்டத்திற்கு வேகத்தடையாக இருக்கின்றன. ‘கிரீன் மேட்’ காட்சிகள் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டதுபோல சொதப்பலாகத் தெரிவது, ஒரே சீனுக்குள் மாறிக்கொண்டே இருக்கும் சந்தானத்தின் ‘ஹேர் ஸ்டைல்’ எனப் பல கன்டினியூட்டி பிரச்னைகளையும் உணர முடிகிறது.

`லொள்ளு சபா’ நடிகர்களை உள்ளடக்கிய வெவ்வேறு குழுக்கள், அவர்கள் அனைவரும் ஒரே பிரச்னைக்காக ஓடுவது, அவர்களோடு சந்தானமும் ஓடுவது, க்ளைமாக்ஸ் கலாட்டாவில் எல்லோரும் இணைவது, என வழக்கமானதொரு சந்தானம் படமாக வந்திருக்கும் இதில், ரவுடிகள், கடத்தல்காரர்களுக்கு மாற்றாகக் குண்டு வைக்கும் தீவிரவாதிகளையும் அவர்களைத் துரத்தும் காவல்துறையையும் சேர்த்திருக்கிறது படக்குழு.

Inga Naan Thaan Kingu Review

தொடக்கம் முதலே அடுக்கடுக்காக காமெடிகள் வந்தாலும், அவை கதையை ஒரே இடத்தில் நிறுத்தி வைக்காமல் திரைக்கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்திக்கொண்டே இருக்கின்றன. எக்கச்சக்க காமெடி கதாபாத்திரங்கள் ஒரே ‘ஐக்யூ’ லெவலில் வந்தாலும், அவற்றைத் துருத்தலின்றி கதையோட்டத்தோடு இணைத்து, அவற்றுக்குத் தேவையான இடத்தையும் கொடுத்திருக்கிறது எழிச்சூர் அரவிந்தனின் எழுத்து. இடைவேளை திருப்பம் யூகிக்கும்படியாக இருந்தாலும், அது முதற்பாதிக்குப் பாதகமாக இல்லை. ஐ.பி.எல், தமிழ் சினிமா தொடர்பான சமகால ஒன்லைன் காமெடிகள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன.

இரண்டாம் பாதியும் வெவ்வேறு காமெடி குழுக்களின் காமெடி கலாட்டாக்களால் நிறைந்திருக்கிறது. அந்த காமெடிகளும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த படத்திலும் எள்ளளவுக்குக் கூட லாஜிக் இல்லை. “திரையரங்கிற்குள் நுழையும்போதே கட்டை பை நிறைய லாஜிக்குகளை நீங்களே எடுத்து வாருங்கள்” என்ற முன்னெச்சரிக்கையைக் கொடுத்திருக்கலாம். இக்குறைகளை நடிகர்களின் சேட்டைகளும், ஒன்லைன் காமெடிகளும் ஓரளவிற்கு மறைக்க முயன்றிருக்கின்றன.

இந்திய நகரங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், சென்னையில் சுற்றித் திரியும் தீவிரவாதிகள் எனப் புளித்துப் போன கான்செப்ட்டானது திரைக்கதையை விறுவிறுப்பாக்கும் என நம்பி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் லாஜிக்கும் இல்லை, ஆழமும் இல்லை என்பதால் பிசுபிசுக்கவே செய்கிறது. வரிசை கட்டும் பாடல்களும் பரபர திரைக்கதைக்குக் கட்டைப் போடுகின்றன. இன்னுமா கதையை நிறுத்திவிட்டு டூயட் சிச்சுவேஷனுக்குப் போய் வருகிறார்கள்? அப்டேட் ஆகுங்கள் பாஸ்!

Inga Naan Thaan Kingu Review

உருவக் கேலிகளையும் பெண்களை ஆபாசமாகப் பேசுவதையும் காமெடி என இக்காலத்திலும் நினைக்கும் திரை எழுத்தாளரின் பொறுப்பின்மை கண்டிக்கத்தக்கது. க்ளைமாக்ஸ் காட்சித் தொகுப்பு நீளமாக இருந்தாலும், சின்ன சின்ன சுவாரஸ்யமான விஷயங்களும், காமெடி ஒன்லைன்களும் அதைக் கலகலப்பாக்கி இருக்கின்றன.

மொத்தத்தில் காமெடி ஆங்காங்கே க்ளிக்கானாலே போதும், லாஜிக் இல்லையென்றாலும் மேஜிக் செய்யலாம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது சந்தானம் & கோ!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.