டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் இடைக்கால ஜாமீனில் வெளிவந்ததையடுத்து, திங்களன்று அவரைச் சந்திக்கச் சென்ற ஆம் ஆத்மி எம்.பி-யும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஸ்வாதி மாலிவால் போலீஸில் அன்றே புகார் அளித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாகவே, பிபவ் குமார் ஸ்வாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், கெஜ்ரிவால் முழு சம்பவத்தையும் அறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்றிரவு இந்த வழக்கில் டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது பற்றிய எஃப்.ஐ.ஆர் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி சம்பவம் நடந்தது பற்றி எஃப்.ஐ.ஆரில் ஸ்வாதி மாலிவால், `திங்களன்று கெஜ்ரிவாலைச் சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றேன். அங்கு கெஜ்ரிவாலின் உதவியாளரைத் தொடர்புகொள்ள முயன்றேன். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அறையில் காத்திருக்குமாறு என்னிடம் கூறினர்.
அதன்படி, அறையில் நான் காத்திருந்தபோது அறைக்குள் புகுந்து என்னைத் திட்டத் தொடங்கிய பிபவ் குமார், எனது கன்னத்தில் ஏழெட்டு முறை பலமாக அறைந்தார். நான் சத்தமாக என்னை விட்டுவிடுங்கள் என்றேன். ஆனால், அதைக் காதில் வாங்காமல் இந்தியில் திட்டிக்கொண்டே மேலும் தாக்கினார். எனக்கு மாதவிலக்கு, வலி அதிகமாக இருக்கிறது விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். உதவிக்காக மீண்டும் மீண்டும் கத்தினேன். ஒரு கட்டத்தில், என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவரை என் கால்களால் தள்ளிவிட்டேன்.

அப்போது பிபவ் குமார் இன்னும் கொடூரமாக என்னுடைய சட்டையை மேலே இழுத்துத் தாக்கினார். மார்பு, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் காலால் கடுமையாக எட்டி உதைத்தார். இத்தகைய தாக்குதலால் நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் ஒருவழியாக வீட்டிலிருந்து வெளிவந்து உடனடியாக 112 எண்ணுக்கு அழைத்து சம்பவத்தை தெரிவித்தேன்.
அந்த சமயத்தில், பிரதான வாயிலில் பணிபுரியும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பிபவ் குமார் அங்கு வந்தார். அவர்களிடம், நான் தாக்கப்பட்டதைக் கூறினேன். என் நிலையைக் கண்டவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார். இப்படியிருக்க, தேர்தல் நடந்துகொண்டிருப்பதால் நாட்டின் பிரச்னைகளில் கவனம் செலுத்துமாறும், இதை பா.ஜ.க அரசியலாக்க வேண்டாம் என்றும் ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருக்கிறார்.

நேற்றிரவு எஃப்.ஐ.ஆர் பதிவான பிறகு ஸ்வாதி மாலிவால் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இதுகுறித்து போலீஸில் வாக்குமூலம் அளித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். நாட்டில் முக்கியமான தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது ஸ்வாதி மாலிவால் முக்கியமல்ல, நாட்டின் பிரச்னைகள்தான் முக்கியம். எனவே, இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பா.ஜ.க-விடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் வைத்துக்கொள்கிறேன்’ என்று ட்வீட் செய்திருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb