மும்பை,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற மும்பை 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இந்த சூழ்நிலையில் மும்பை அணியிலிருந்து அடுத்த வருடம் ரோகித் சர்மா வெளியேறுவார் என்ற பேச்சுக்களும் எதிர்பார்ப்புகளும் காணப்படுகிறது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் இந்தியாவின் கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக கேப்டன்ஷிப் பதவியை மும்பை நிர்வாகம் பறித்தது அந்த அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
அதேபோல புதிய கேப்டனாக வந்த ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லையில் பீல்டிங் நிறுத்தினார். அத்துடன் ரோகித் சர்மா இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு எதிரான கோட்பாட்டை கொண்டுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட அவரை சமீபத்திய போட்டிகளில் மும்பை நிர்வாகம் இம்பேக்ட் வீரராக களமிறக்கியது போன்றவை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த வருடம் விளையாடுவாரா என்பதை பற்றி முடிவு செய்யவில்லை என மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்தில் அவரை விடுவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக பவுச்சர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ரோகித் சர்மாவின் வருங்காலம் பற்றி நாங்கள் அதிகமாக பேசவில்லை. ரோகித் சர்மாவிடம் நேற்று அடுத்தது என்ன? என்று கேட்டேன். அதற்கு டி20 உலகக்கோப்பை என்று அவர் பதிலளித்தார். அதுதான் சரி. ரோகித் சர்மாவின் வருங்காலத்தைப் பற்றி அந்த தகவல்தான் எனக்கு வேண்டியுள்ளது. இருப்பினும் அடுத்த வருடம் மெகா ஏலம் நடக்க உள்ளது.
எனவே அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை யாரால் கணிக்க முடியும்? நாங்கள் ஒவ்வொரு நாளும் வரும் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். இந்த சீசனில் நன்றாக துவங்கிய அவர் சென்னை அணிக்கு எதிராக சதமடித்தார். ஆனால் நடுவே பெரிய ரன்கள் அடிக்கத் தவறினார். இருப்பினும் இறுதியில் சிறப்பாக முடித்தார். அந்த வகையில் இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு இரண்டு விதமாக அமைந்தது” என்று கூறினார்.